தண்ணீர், உணவு, பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு : அவலத்தில் டிரிபோலி

Added : ஆக 27, 2011 | |
Advertisement
டிரிபோலி : லிபியா தலைநகர் டிரிபோலியில், அமைதி திரும்பியுள்ள நிலையில், நகரின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பிணங்கள் குவிந்து கிடப்பதால், சுகாதாரம் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. கடாபியின் மகள் ஆயிஷா, மகன்கள்
தண்ணீர், உணவு, பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு : அவலத்தில் டிரிபோலி

டிரிபோலி : லிபியா தலைநகர் டிரிபோலியில், அமைதி திரும்பியுள்ள நிலையில், நகரின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பிணங்கள் குவிந்து கிடப்பதால், சுகாதாரம் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.

கடாபியின் மகள் ஆயிஷா, மகன்கள் சாடி மற்றும் ஹானிபல் ஆகியோரின் வீடுகளை, எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அஜீசியாவில் இருந்த சுரங்கப் பாதை ஒன்றின் மூலம், டிரிபோலிக்கு அடியில், பல திசைகளுக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதைகளை எதிர்ப்பாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இரண்டு பேர் செல்லக் கூடிய அகலம் உடைய, இந்த சுரங்கப் பாதைகளில், கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் இயக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், அந்தக் கார்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த, லிபியா, டுனிஷியா எல்லை அருகில் உள்ள பகுதி ஒன்றை, எதிர்ப்பாளர்கள் நேற்று கைப்பற்றினர். அதேநேரம், தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியிலும், அவர்கள் கடாபி ஆதரவாளர்களை முறியடித்தனர்.

துர்நாற்றத்தில் டிரிபோலி: டிரிபோலியில் சண்டை ஓய்ந்து விட்டதால், பெங்காசியில் இயங்கி வரும், லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில், தனது நிர்வாகத்தை டிரிபோலிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், டிரிபோலியின் பெரும்பாலான பகுதிகளில், நிலவரம் மிக மோசமாக உள்ளது.

டாக்டர்களும், நர்சுகளும், பல மருத்துவமனைகளைக் கைவிட்டு விட்டுப் போய்விட்டதால், அவற்றில் உள்ள பிணங்கள் அழுகி, துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. அதேபோல், நகரில் இரு தரப்பினருக்கும் சண்டை நடந்த பகுதிகளில், பல பிணங்கள் கிடக்கின்றன. அவை இன்னும் அகற்றப்படாததால், நகரில் சுகாதாரம் மோசமாகியுள்ளது.

உணவுக்குத் தட்டுப்பாடு: குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

தேசிய இடைக்காலக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர், மகமூத் ஷம்மாம் கூறுகையில்,"ஞாயிற்றுக் கிழமைக்குள் (இன்று), அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க, வழிவகை செய்யப்படும்' என்றார்.

டிரிபோலி மக்களுக்கு, பல்வேறு வகைகளிலும் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேடுதல் வேட்டையில் கடாபி: கடாபி எங்கிருக்கிறார் என்பது, இன்னும் தெரியவராத நிலையில், அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. " எங்களைப் பொருத்தவரை, அவர் கதை முடிந்து விட்டது. அவர் ஒவ்வொரு இடமாக, ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து பிடித்துவிடுவோம் என்றாலும், அவர் மற்றும் அவரது மகன்களின் கைது வரை, எல்லாக் காரியங்களையும் தள்ளிப் போட முடியாது' என, ஷம்மாம் தெரிவித்தார்.

டிரிபோலி தற்போது அமைதிக்குத் திரும்பியுள்ள நிலையில், கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரில், கடாபி ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக, இடைக்கால அரசின் சார்பில், சிர்ட் நகரின் பழங்குடியினத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவை தோல்வி அடைந்தன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X