புதுடில்லி,-சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருக்கு, பிணையில் வரக் கூடிய, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அசன்சோல் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், திரிணமுல் காங்.,- எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து நிலக்கரி மோசடியில் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, ருஜிரா பானர்ஜி மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை பல முறை கடிதம் அனுப்பியும், ருஜிரா பானர்ஜி வரவில்லை. இதையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் ருஜிரா பானர்ஜிக்கு வாரன்ட் பிறப்பிக்கக்கோரி அமலாக்கத் துறை இயக்குனரகம் சார்பில், டில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ருஜிரா பானர்ஜிக்கு, பிணையில் வரக் கூடிய வாரன்ட் பிறப்பித்து, வழக்கை ஆக., 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. நிலக்கரி ஊழல் பணம் அபிஷேக் பானர்ஜிக்கு சென்றுள்ளதாக அமலாக்கத் துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.