சென்னை : ''ஆட்சிக்கு வந்ததும், மக்களை மறந்து விடுவது தான், திராவிட மாடல் ஆட்சி,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார். தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக, பொய்யான விளம்பரத்தை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்திடுவோம்' என, முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ., உதயநிதி ஆகியோர் கூறினர்; இதுவரை செய்ய வில்லை. 'நீட்' தேர்வை கொண்டு வந்ததும் அவர்கள் தான், எதிர்ப்பதும் அவர்கள் தான். மகளிர் இலவசமாக பஸ்களில் செல்லலாம் என்கின்றனர்.ஆனால், சென்னையில், 33 சதவீத பஸ்களில் மட்டுமே செல்ல முடிகிறது.
தேர்தல் நேரத்தில் ஒரு அறிவிப்பு; தேர்தல் முடிந்த பின் ஒரு அறிவிப்பு. மீண்டும் மின்வெட்டு வந்துள்ளது. விலைவாசியும் உயர்ந்துள்ளது.எங்கள் ஆட்சியில் 'அம்மா கிளினிக்' ஆரம்பித்தோம்; அதை பின்பற்றி, 708 நகர்ப்புற சுகாதார மையம் திறப்பதாகக் கூறியுள்ளார்.சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்.

அடுத்து மின் கட்டணம், குடிநீர் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்த உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும், மக்களை மறந்து விடுவது தான் திராவிட மாடல். அம்மா உணவகம்திட்டத்தை முடக்கினால், மக்கள் தகுந்த பதில் கொடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE