வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டனப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு விதித்த தடையை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., விலகிக்கொண்டார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் குரு பூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெற உள்ள பட்டனப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., பாலாஜி கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 233வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக முதல்வர் ஸ்டாலின், பட்டனப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., நீக்கியுள்ளார். தருமபுர ஆதீனத்தில் இருந்து அளிக்கப்பட்ட மனுவை தொடர்ந்து தடை விலக்கிக் கொள்வதாக ஆர்டிஓ ஆணையிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.