சென்னை: சென்னையில் தொழிலதிபரையும் அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்து பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் டிரைவரையும் கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். 1250 சவரன் தங்க நகைகள் 70 கிலோ வெள்ளி பொருட்களையும் மீட்டனர்.

இந்தக் கொலை குறித்து தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் அளித்த பேட்டி: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 58; தொழிலதிபர். இவரது மனைவி அனுராதா 55. இவர்களது மகள் சுனந்தா 38; மகன் சஸ்வத் 28. இருவரும் அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் மென்பொறியாளராக பணிபுரிகின்றனர். ஆமதாபாத்தில் ஸ்ரீகாந்த் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி சூளேரிக்காடு பகுதியில் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால் 65 காவலாளியாக உள்ளார். பதம்லாலின் மகன் கிருஷ்ணா 45; கார் டிரைவர். கிருஷ்ணாவின் நண்பர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரவி ராய் 60. இருவரும் சென்னையில் 'ஆக்டிங் டிரைவராக' வேலை பார்த்து வருகின்றனர்.
ஸ்ரீகாந்த் அனுராதா ஆகியோர் வெளியூர் செல்ல தங்கள் பண்ணை வீட்டு வாட்ச்மேன் மகனான கிருஷ்ணாவை கார் ஓட்ட அழைப்பர். கிருஷ்ணா தங்குவதற்கு தங்கள் வீட்டின் கீழ் தளத்தில் நிரந்தரமாக அறை ஒதுக்கி உள்ளனர். கிருஷ்ணா அடிக்கடி ரவி ராயை அழைத்து வந்துள்ளார். இதனால் ரவிராயும் ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு தெரிந்த நபராக மாறினார். மகளின் பிரசவத்திற்காக ஸ்ரீகாந்த் அனுராதா ஆகியோர் நவம்பரில் கலிபோர்னியா சென்றனர். ஜனவரியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலத்தை விற்க ஸ்ரீகாந்த மட்டும் சென்னை வந்துள்ளார். அப்போது அவரை விமான நிலையத்தில் இருந்து கிருஷ்ணா தான் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அலைபேசியில் யாரிடமோ 'நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்று விட்டேன். பணமும் வந்து சேர்ந்து விட்டது' என்று ஸ்ரீகாந்த் பேசியுள்ளார். இந்த 40 கோடி ரூபாயை திருடி சொந்த மாநிலத்தில் 'செட்டில்' ஆக கிருஷ்ணா முடிவு செய்தார். அதற்காக ரவிராயுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். திருடும் பணத்தில் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர்.ஸ்ரீகாந்த் மீண்டும் கலிபோர்னியா சென்றுவிட்டார். அவர்கள் வந்த பின் கொன்று அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உடலை புதைத்து விட தீர்மானித்தனர். அங்கு காவலாளியாக இருந்த பதன்லாலும் 15 நாள் விடுமுறையில் நேபாளம் சென்று விட்டார். பண்ணை வீட்டிற்கான சாவி கிருஷ்ணாவிடம் தான் இருந்தது.ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் இருந்து கிருஷ்ணா தான் காரில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்.இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் 'சோர்வாக இருக்கிறது. சற்று துாங்க வேண்டும்' என பேசியபடி அனுராதா முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றார்; கீழ்தளத்தில் உள்ள அறைக்கு ஸ்ரீகாந்த் சென்றார்.
அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி கோடாரி போன்ற ஆயுதம் பொருத்திய உருட்டுக் கட்டையால் அனுராதாவின் தலையில் கிருஷ்ணா ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரிடமிருந்து சாவிக் கொத்தை எடுத்தனர். பின் கீழே இறங்கிய அவர்கள் உருட்டுக் கட்டையால் ஸ்ரீகாந்த் தலையில் அடித்துள்ளனர். பின் இருவரையும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.தொடர்ந்து வீட்டில் இருந்த அனைத்து அலமாரிகளையும் திறந்து பார்த்துள்ளனர். ஒரு ரூபாய் கூட இல்லை. கொள்ளையடிக்க திட்டமிட்ட 40 கோடி ரூபாய் எங்கே என கேட்பதற்குள் ஸ்ரீகாந்த் அனுராதா உயிர் பிரிந்தது. ஆனால் அலமாரிகளில் 10 கிலோ தங்க நகைகள் 70 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வைர நகைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் அனுராதா ஸ்ரீகாந்த் ஆகியோர் கலிபோர்னியாவில் இருந்து கொண்டு வந்த மூன்றுக்கும் மேற்பட்ட 'டிராவல் பேக்'கில் வைத்து கார் 'டிக்கி'யில் ஏற்றினர்.

பின் படுக்கை அறையில் இருந்த போர்வையால் ஸ்ரீகாந்த் அனுராதா ஆகியோரை மூட்டையாக கட்டி காரில் உட்கார்ந்து இருப்பது போல பண்ணை வீட்டிற்கு கடத்தினர். அங்கு ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் இருவரது உடலையும் புதைத்து விட்டு காரில் நேபாளம் தப்ப முயன்றனர். அவர்களை சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்திற்குள் ஆந்திர மாநில போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
'மினி' நகை கடை
கிருஷ்ணா மற்றும் ரவிராயிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் சென்னை வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். அப்போது அந்த இடமே மினி நகை கடை போல இருந்தது.
வெளிநாட்டில் மகன் மகள் கதறல்

சென்னைக்கு வந்ததும் ஸ்ரீகாந்த் தன் மகன் மகளை தொடர்பு கொண்டார். 'நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டோம்; கிருஷ்ணா தான் அழைக்க வந்தார். வீட்டுக்கு சென்றதும் ஓய்வெடுத்த பின் மீண்டும் பேசுகிறோம்' எனக்கூறி தொடர்பை துண்டித்து விட்டார். அதன்பின் காலை 8:00 மணியளவில் மகன் சஸ்வத் தந்தை தாயின் மொபைல் போனை தொடர்பு கொண்ட போது 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. கிருஷ்ணாவை தொடர்பு கொண்டார். 'இருவரும் ஓய்வெடுக்கின்றனர். என்னை காய்கறி வாங்கி வர வெளியே அனுப்பினர்' என்று கூறி உள்ளார்.அதன்பின் தொடர்பு கொண்டபோது முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தார். பின் அலைபேசியை 'சுவிட் ஆப்' செய்து விட்டார். இதுபற்றி சகோதரி சுனந்தாவுக்கு அவர் தெரிவித்துள்ளார்.தங்களை சந்தித்து விட்டு சென்ற நிலையில் தந்தை தாய் கொடூரமாக கொல்லப்பட்ட தகவல் அறிந்து போலீசாரை தொடர்பு கொண்டு இருவரும் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர்.
கொலையாளிகள் சிக்கியது எப்படி
சென்னை அடையாறு, இந்திரா நகரில் வசிக்கும் ஸ்ரீகாந்தின் உறவினர் ரமேஷ் பரமசிவம், நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அவசர போலீஸ் எண் 100ஐ தொடர்பு கொண்டார். 'வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரை காணவில்லை. கார் ஓட்டுனர் கிருஷ்ணாவும் மாயமாகி உள்ளார். பயமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார். போலீசார் உடனடியாக ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்றனர். வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அலமாரிகள் அனைத்தும் திறந்து கிடந்தன. இதனால், இருவரையும் மர்ம நபர்கள் கடத்தி, எங்கேயாவது அடைத்து வைத்து, பணம் பறிக்க முயற்சி செய்யலாம் என்று சந்தேகம் அடைந்தனர். வீட்டில் ரத்த வாடை அடித்தது. அத்துடன், 'டெட்டால்' ஊற்றி, தரை தளம் மற்றும் முதல் மாடியில் ரத்தக்கறைகள் கழுவி விடப்பட்டிருந்தன. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.படுக்கை அறையில், மெத்தை விரிப்புகள் மாயமாகி இருந்தன. இதனால், இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் முடிவுக்கு வந்தனர்.

கிருஷ்ணாவின் மொபைல் போன் எண், 'சுவிட் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. நெம்மேலி பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.ஒரு இடத்தில், புதிதாக உடலை அடக்கம் செய்ததை போல, பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில், முக்கால்வாசி எரிந்த நிலையில், மொபைல் போன் மற்றும் கையுறை கிடந்தது.அதனால், கிருஷ்ணா இருவரையும் கொன்று புதைத்திருக்கலாம் என, போலீசார் தீர்க்கமான முடிவுக்கு வந்தனர். ஸ்ரீகாந்தின் காரும் கிருஷ்ணாவிடம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.இந்தக் கார், நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில், உத்தண்டி பகுதி சுங்கச்சாவடியை கடந்திருப்பது, அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின், சூளைமேடு வழியாக பாடி மேம்பாலம் சென்று, ஆந்திரா நோக்கி செல்வதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்தனர்.
மதியம், 12:00 மணியளவில், ஆந்திர மாநிலம், நெல்லுார் சுங்கச்சாவடியை கடந்ததும், காரை கிருஷ்ணா ஓட்டுவதும், அருகே ரவிராய் உட்கார்ந்திருப்பதும் அங்குள்ள, 'சிசிடிவி கேமரா' பதிவு வாயிலாக தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கார் நெல்லுாரை கடந்து விட்டதை அறிந்த போலீசார் அந்த வழித்தடத்தில் உள்ள, பெட்ரோல் பங்க் அனைத்திலும், சாதாரண உடையில் போலீசாரை நிறுத்தினர்.'கிருஷ்ணா ஓட்டிச் செல்லும் கார், நேபாளம் சென்று விட்டால் பிடிப்பது சிரமம். அதற்குள் மடக்கிவிட வேண்டும்' என, இரு மாநில போலீசாரும் அசுர வேகத்தில் செயல்பட்டனர். ரயிலில் ஏறி தப்பிவிடக்கூடாது என்பதற்காக, அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.

மாலை, 5:00 மணியளவில், கிருஷ்ணா ஓட்டிச்சென்ற கார், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே சென்ற போது, அம்மாநில போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின், உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காருக்குள், கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை, நேபாளத்தில் வாங்கப்பட்ட கத்தி, ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து அகற்றப்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள், அதற்கான, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.கார், 'டிக்கியில்' 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி பொருட்கள், வைரம், பிளாட்டினம் நகைகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு, 8 கோடி ரூபாய். இரு மாநில போலீசாரும் நகைகளை 'வீடியோ' பதிவும் செய்தனர்.
'மகனுக்காக கொலை செய்தேன்'
போலீசாரிடம் கிருஷ்ணா அளித்துள்ள வாக்குமூலம்: ஸ்ரீகாந்த் வீட்டில் என் தந்தை வேலை பார்த்த போதிலும், சம்பளம் மட்டுமே தருவார். மகனை பள்ளியில் சேர்க்க உதவி கேட்டேன்; செய்ய மறுத்து விட்டார். கூப்பிடும் நேரமெல்லாம், நானும் கார் ஓட்டச் செல்வேன். அதற்குரிய சம்பளத்தை தவிர, ஊக்கத்தொகை தரமாட்டார். ஸ்ரீகாந்த் வீட்டில், கோடிக்கணக்கில் பணம் இருப்பது எனக்கு தெரியும். என் மகனை பெரியளவில் படிக்க வைக்க முடிவு செய்தேன். நானும், ரவி ராயும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்றும் ஆசைப்பட்டோம். அதற்காக, நல்லவர்கள் போல நடித்து, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றோம். அவர்களிடம், 40 கோடி ரூபாயை திருட வேண்டும்; அதற்கு இருவரையும் கொல்ல வேண்டும் என, நண்பருடன் சேர்ந்து பல மாதங்களாக திட்டம் தீட்டினேன். சமயம் பார்த்து கொன்று விட்டோம்.
ஆனால், பணம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது. அதற்கு பதிலாக, வீட்டில் இருந்த அனைத்து நகைகள் மற்றும் அனுராதா அணிந்திருந்த நகைகளை திருடி நேபாளம் சென்று விற்க திட்டமிட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடல்கள் தோண்டி எடுப்பு
சென்னை மயிலாப்பூர் உதவி கமிஷனர் கவுதம் உள்ளிட்ட போலீசார், நெம்மேலி பண்ணை வீட்டில், ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை நேற்று மதியம், 2:50 மணிக்கு அழைத்து சென்றனர். அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் திருப்போரூர் தாசில்தார் ராஜன் முன்னிலையில் உடல்களை தோண்டும் பணி நடந்தது. தோண்டியதில் இருவரின் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக கிடத்தப்பட்டு, அவற்றின் மேல் கற்களை போட்டு இருந்தது தெரிந்தது. மாலை 5:00 மணிக்கு உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், கொலை நடந்த வீடு மற்றும் பண்ணை வீட்டில், போலீசாரிடம் சம்பவம் குறித்து, கொலையாளிகள் நடித்தும் காட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE