புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் எதிர்காலத்தில் ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பார்லி குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து துறை தலைவர்கள், பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் ஆகியோர் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏதேனும் உதவிதேவைப்பட்டால், ஹிந்தி பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவிற்கு புதுச்சேரியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளை போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது. ஜிப்மரின் இந்த அறிவிக்கைக்கு, திமுக எம்.பி., கனிமொழி, மதிமுக பொது செயலர் வைகோ, பாமக இளைஞரணி செயலர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.