வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசை சேராத ஒருவரை வேட்பாளராக நிறுத்த, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் ஜூலையில் நடக்க உள்ளது. கடந்த ௨௦௧௭ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரித்தன.இம்முறை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
ஆனால் இந்த முறை காங்கிரஸ் அல்லாதவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆகியோர் விரும்புகின்றனர்.திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த மம்தா திட்டமிட்டுள்ளார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது பற்றி காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.,வின் நிலையை தெரிவிக்க அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு டில்லி வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டால், அது, ௨௦௨௪ லோக்சபா தேர்தலிலும் தொடரலாம் என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
- புதுடில்லி நிருபர் -