இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ரூ 40 கோடிக்காக தொழிலதிபர், மனைவி கொலை

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்வெடிகுண்டு வைத்திருந்த இருவர் பஞ்சாப்பில் கைது சண்டிகர்,கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு பொருட்கள் வைத்திருந்த இருவரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தரன் தரன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள், வெடி பொருட்களுடன் அலைவதாக
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
வெடிகுண்டு வைத்திருந்த இருவர் பஞ்சாப்பில் கைதுசண்டிகர்,கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு பொருட்கள் வைத்திருந்த இருவரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தரன் தரன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள், வெடி பொருட்களுடன் அலைவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுதும் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் பயங்கர சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆர்.டி.எக்ஸ்., வெடிபொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.மேலும், வெடிகுண்டு களை வெடிக்கச் செய்வதற்கான 'டைமர், பேட்டரி, ஒயர்' போன்ற வற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்ஜீந்தர் சிங், ஜகதர் சிங் என தெரியவந்தது. பஞ்சாபில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்த, அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.சமீபத்தில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை, வெடிபொருட்களுடன் ஹரியானா போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போதும் வெடிபொருட்களுடன், மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பெண்களை ஏமாற்றி மோசடி ஆந்திர இளைஞர் சிக்கினார்திருப்பதி,-சமூக வலைதளங்களில் அறிமுகம் ஆன இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜமுந்திரி நகரைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா, 31. பி.டெக்., படித்துள்ள இவர், ஹைதராபாத் நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் 2014ல் வேலை செய்தார். அப்போது குதிரை பந்தயம் மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்தார். இதையடுத்து டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை தேடி வந்த இளம்பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பணம் பறித்துள்ளார். கோடீஸ்வரர் வீட்டு மகன் என கூறி, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் பல பெண்களை ஏமாற்றிஉள்ளார்.மேலும், எம்.எல்.ஏ., ஒருவர் பெயரில் சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி, அதன் வாயிலாக வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணத்தை கறந்துள்ளார். கடந்த 2014- முதல் இதுவரை 500-க்கும் மேற்பட்டோரிடம் 3.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துஉள்ளது. ஹைதராபாத் போலீசில் 60-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.


ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைதுஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு, பயங்கரவாதிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து, தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த இருவர், சந்தேகத்திற்குரிய வகையில் பாதுகாப்புப் படையினரை நோட்டமிட்டனர். இதைப் பார்த்த வீரர்கள், அந்த காரை நிறுத்தச் சென்றனர். எனினும் அங்கிருந்து தப்பிச் செல்ல இருவரும் முயன்றனர்.பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு, அந்த காரை நிறுத்தினர். பின் இருவரையும் பிடித்து கைது செய்தனர். அந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே., 47 ரக துப்பாக்கி, நான்கு கை துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்
நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த லாரிகள்


காங்கேயம்,-காங்கேயம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், டிரைவர் கருகி பலியானார். இருவர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து, 20க்கும் மேற்பட்ட டூ - வீலர்களை ஏற்றிய லாரி, துாத்துக்குடி புறப்பட்டது. டிரைவர் பிரபாகரன், 40, ஓட்டினார்.அதே சமயம், தாராபுரத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு, காங்கேயத்தில் உள்ள நிறுவனத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரைச் சேர்ந்த டிரைவர் கார்த்தி, 40, லாரியை ஓட்டினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ரூபிலால், 22, லாரியில் வந்தார்.

தாராபுரத்தில் இருந்து காங்கேயம் செல்ல, ஊதியூர் குண்டடம் பிரிவு அருகே, இரு லாரிகளும் நேற்று மதியம் 3:00 மணியளவில் வந்தன. அப்போது இரு லாரிகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில், ஒரு லாரியில் பிடித்த தீ, மற்றொரு லாரிக்கும் பரவியது. இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் இரு லாரிகளிலும் சிக்கித் தவித்த மூவரையும் மீட்க முயன்றனர்.

ஆனால், இடிபாடுகளில் சிக்கிய பிரபாகரன், லாரியிலேயே கருகி பலியானார்.கார்த்தி, ரூபிலாலை மக்கள் மீட்டனர். இருவரும், 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வீடு புகுந்து 42 பவுன் கொள்ளைகம்பம்,- -தேனி மாவட்டம் கம்பத்தில் பூட்டியிருந்த ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 42 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

கம்பம் சங்கிலி நகர் ஜெயச்சந்திரன் 51, கருநாக்கமுத்தன்பட்டி பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி அனுராதா 48, ராயப்பன்பட்டி பள்ளி ஆசிரியர். அருகில் உள்ள தெருவில், இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கணவனும், மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் காலை சென்றனர்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பியபோது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கின்றார்.


latest tamil news
தனியார் 'பிளாஸ்டிக்' குடோனில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசம்பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில், அடுத்தடுத்த குடோன்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும், பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து வைத்து, தரம் பிரிக்கும் குடோன்கள் செயல்படுகின்றன. அதிர்ச்சிஇந்நிலையில், யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, பிளாஸ்டிக் குடோனில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, பூந்தமல்லி தீயணைப்பு படையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மேலும் இரண்டு குடோன்களுக்கு தீ பரவியது. இதனால், அடுத்தடுத்த மூன்று குடோன்களும், ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க அப்பகுதி, இளைஞர்களும், பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்தனர்.தீ அதிக அளவில் எரிந்ததால், கூடுதலாக கோயம்பேடு, மதுரவாயல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஐந்து வாகனங்களில், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், தீ அணைக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக, குடோன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். உயிரிழப்பு இல்லைநேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால், குடோன்களில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.குடியிருப்புகளுக்கு நடுவே, உரிய அனுமதியின்றி, பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் செயல்படுவது ஆபத்தானது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு


குன்னுார்--குன்னுார் அருகே தேயிலை தோட்டத்தில், யானை தாக்கி தொழிலாளி இறந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்தவர் முருகன், 43; தேயிலை எஸ்டேட் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு எஸ்டேட் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டுக்கு திரும்பும் வழியில், காட்டு யானை தாக்கியதில் முருகன் இறந்தார். இரவு வீட்டுக்கு வராத முருகனை, மனைவி மற்றும் குழந்தைகள் தேடி உள்ளனர்.நேற்று காலை பார்த்தபோது, வீட்டின் அருகே தேயிலை தோட்டத்தில், அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. குன்னுார் வனச்சரகர் சசிகுமார் மற்றும் ஊழியர்கள் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


latest tamil news

ராமேஸ்வரம் அருகே கோர விபத்து டூவீலர் மீது கார் மோதி 4 பேர் பலிராமேஸ்வரம்-ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் டூவீலரில் சென்ற ஜெகன் 37, ஜெகதீஷ் 18, உமாமகேஸ்வரன் 42, வாக்கிங் சென்ற ஓய்வு எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி 68 ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர்.

மண்டபம் யாதவர் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் மகன் ஜெகன், இவரது மருமகன் ஜெகதீஷ் 18, மறவர் தெரு வம்சசேகரபாண்டியன் மகன் உமாமகேஸ்வரன் 42, ஜெகனை தவிர மற்ற இருவரும் வேதாளை டீசல் பங்க்கில் பணிபுரிகின்றனர். நேற்று காலை 6:00 மணிக்கு ஜெகன் தனது டூவீலரில் ஜெகதீஷ், உமாமகேஸ்வரனை பங்கில் இறக்கி விட சென்றார். (மூவரும் ெஹல்மெட் அணியவில்லை)

அப்போது கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் மகன் சம்பத்குமார் 21, உறவினர்களுடன் பெரியப்பாவுக்கு திதி செய்ய ராமேஸ்வரம் கோயிலுக்கு காரில் வந்தார். சாலையில் வளைவு இருந்ததை கவனிக்காமல் காரை ஓட்டியதால், டூவீலர் மற்றும் வாக்கிங் சென்ற ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி 68, மீது மோதியது. இதில் நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். 100 அடி தூரத்திற்கு பைக்கை இழுத்து சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் ஜெகன், ஜெகதீஷ், உமாமகேஸ்வரன் சம்பவ இடத்திலும், கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தை எஸ்.பி., கார்த்திக் ஆய்வு செய்தார். காரில் வந்த டிரைவர் உட்பட நால்வரும் லேசான காயங்களுடன் தப்பினர்.தேவை சென்டர் மீடியன் ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 500 க்கும் மேலான வாகனங்கள் வருகின்றன. இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் சாலையை கடக்க முயலும் போது விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். எனவே ராமநாதபுரம், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி 'சென்டர் மீடியன்' வைக்க அரசு முன்வர வேண்டும்.


latest tamil news
ரூ.40 கோடிக்காக மனைவியுடன் தொழிலதிபர் கொடூர கொலை
சென்னை-சென்னையில் தொழிலதிபரையும், அவரது மனைவியையும், 40 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு, கொடூரமாக கொலை செய்து, பண்ணை வீட்டில் உடலை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக, சாதுர்யமாக செயல்பட்ட போலீசார், சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில், குற்றவாளியான தொழிலதிபரின் கார் டிரைவரையும், அவரது கூட்டாளியையும் கைது செய்தனர். மேலும், 1,250 சவரன் தங்க நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்களையும் மீட்டனர்.அடிக்கடி வெளியூர்இந்தக் கொலை குறித்து, தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 58; தொழிலதிபர். இவரது மனைவி அனுராதா, 55. இவர்களது மகள் சுனந்தா, 38; மகன் சஸ்வத், 28. இவர்கள் இருவரும், அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில், மென்பொறியாளராக பணிபுரிகின்றனர். சஸ்வத்திற்கு திருமணமாகவில்லை

.குஜராத் மாநிலம் ஆமதாபாதில், ஸ்ரீகாந்த் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வீட்டில் அனுராதா மட்டுமே இருப்பார்.இவர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, சூளேரிக்காடு பகுதியில் பண்ணை வீடு உள்ளது. இங்கு வெளிநபர்கள் எளிதில் சென்று விட முடியாது. சுற்றுச்சுவர் மிகவும் உயரமாக எழுப்பப்பட்டுள்ளது.

இந்த பண்ணை வீட்டில், 20 ஆண்டுகளாக, நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால், 65, காவலாளியாக உள்ளார். அவருக்கு அங்கேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பதம்லாலின் மகன் கிருஷ்ணா, 45; கார் டிரைவர். பதம்லாலின் இரு மகள்கள், மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் வீட்டு வேலை செய்கின்றனர்.தந்தை பதம்லால், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டு காவலாளி என்பதால், அவரது குடும்பத்தினருடன் கிருஷ்ணா நெருங்கி பழகினார்.

இவருக்கு திருமணமாகி விட்டது; மனைவி மேற்கு வங்கத்தில் வசிக்கிறார்.இவர்களது, 15 வயது மகன் அம்மாநிலத்தில், 'டார்ஜிலிங்' பகுதியில், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மகனை பள்ளியில் சேர்க்க முயன்ற போது, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரவி ராய், 60, கிருஷ்ணாவுக்கு பழக்கமானார். அவரும் கார் ஓட்டுனர்.இருவரும் சென்னையில், தினக்கூலி அடிப்படையிலான, 'ஆக்டிங் டிரைவராக' வேலை பார்த்து வந்தனர். ஸ்ரீகாந்திடம், 'இன்னோவா' கார் இருந்தது. வெளியூர் மற்றும் ஷாப்பிங் செல்ல, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர், கிருஷ்ணாவை கார் ஓட்ட அழைப்பர்.பாதிக்கு பாதி பங்குமேலும், கிருஷ்ணா தங்குவதற்கு, தங்கள் வீட்டின் கீழ் தளத்தில் நிரந்தரமாக அறை ஒதுக்கி உள்ளனர். கிருஷ்ணா அந்த அறைக்கு அடிக்கடி ரவி ராயை அழைத்து வந்துள்ளார். இதன் வாயிலாக ரவிராயும், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவுக்கு தெரிந்த நபராக மாறினார்.

இந்நிலையில், மகளின் பிரசவத்திற்காக, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர், நவம்பரில் கலிபோர்னியா சென்றனர். பின், ஜனவரியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலத்தை விற்க, ஸ்ரீகாந்த மட்டும் சென்னை வந்துள்ளார். அப்போது, அவரை விமான நிலையத்தில் இருந்து, கிருஷ்ணா தான் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், மொபைல் போனில் யாரிடமோ, 'நிலத்தை, 40 கோடி ரூபாய்க்கு விற்று விட்டேன்; பணமும் வந்து சேர்ந்து விட்டது' என்று, ஸ்ரீகாந்த் பேசியுள்ளார். இந்த பேச்சு தான், அவர் மற்றும் அவரது மனைவி அனுராதாவின் உயிரை குடிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.இந்த, 40 கோடி ரூபாயை திருடி, சொந்த மாநிலத்தில், 'செட்டில்' ஆக கிருஷ்ணா முடிவு செய்தார். அதற்காக, ரவிராயுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

திருடும் பணத்தில், பாதிக்கு பாதி பங்கு பிரித்துக் கொள்வது என்று இருவரும் முடிவு செய்தனர். அந்த நாளுக்காக காத்திருந்தனர்.வந்த வேலை முடிந்து, ஸ்ரீகாந்த் மீண்டும் கலிபோர்னியா சென்று விட்டார். ஆனால், '40 கோடி ரூபாயையும் வீட்டில் தான் வைத்திருக்க வேண்டும். வீட்டின் பூட்டை உடைத்து திருடினால், மாட்டிக் கொள்வோம். ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர் சென்னைக்கு வரட்டும்' என, இருவரும் காத்திருந்தனர்.காத்திருப்புஅதற்கு, அனுராதாவிடம் இருந்த சாவி கொத்து தான் காரணம். அது மட்டும் கிடைத்துவிட்டால், 40 கோடி ரூபாயை அப்படியே மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றுவிடலாம் என, கற்பனையில் மிதந்தனர்.

பணத்தை திருடினால், போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விடுவர்.இதனால், ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரை கொன்று, அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உடலை புதைத்து தொடர்ச்சி 5ம் பக்கம்ரூ.40 கோடிக்காக...3ம் பக்கத் தொடர்ச்சிவிடுவது என, தீர்மானித்தனர். அங்கு காவலாளியாக இருந்த கிருஷ்ணாவின் தந்தை பதன்லாலும், 15 நாள் விடுமுறையில் நேபாளம் சென்று விட்டார். பண்ணை வீட்டிற்கான சாவி, கிருஷ்ணாவிடம் தான் இருந்தது.இந்நிலையில், ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர், நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணிக்கு சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் இருந்து கிருஷ்ணா தான், காரில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்.இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும், 'சோர்வாக இருக்கிறது. சற்று துாங்க வேண்டும்' என பேசியபடி, அனுராதா முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றார்; கீழ்தளத்தில் உள்ள அறைக்கு ஸ்ரீகாந்த் சென்றார்.அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி, கோடாரி போன்ற ஆயுதம் பொருத்திய உருட்டுக் கட்டையால், அனுராதாவின் தலையில் கிருஷ்ணா ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரிடமிருந்து, சாவிக் கொத்தையும் எடுத்தனர். பின், கீழே இறங்கிய, ரவிராய், கிருஷ்ணா ஆகியோர், அதே உருட்டுக் கட்டையால் ஸ்ரீகாந்த் தலையில் அடித்துள்ளனர். பின், இருவரையும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.தொடர்ந்து, வீட்டில் இருந்த அனைத்து அலமாரிகளையும் திறந்து பார்த்துள்ளனர். ஒரு ரூபாய் கூட இல்லை. கொள்ளையடிக்க திட்டமிட்ட 40 கோடி ரூபாய் எங்கே என கேட்பதற்குள், ஸ்ரீகாந்த், அனுராதா உயிர் பிரிந்தது.

ஆனால் அலமாரிகளில், 1,250 சவரன் தங்க நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வைர நகைகள் இருந்தன.அவற்றை எல்லாம் ஒன்று விடாமல், அனுராதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கலிபோர்னியாவில் இருந்து கொண்டு வந்த, மூன்றுக்கும் மேற்பட்ட 'டிராவல் பேக்'கில் வைத்து, கார், 'டிக்கி'யில் ஏற்றினர்.பின், படுக்கை அறையில் இருந்த போர்வையால், ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரை மூட்டையாக கட்டி, காரில் உட்கார்ந்து இருப்பது போல, பண்ணை வீட்டிற்கு கடத்தினர். அங்கு ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், இருவரது உடலையும் புதைத்து விட்டு, காரில் நேபாளம் தப்ப முயன்றனர்.

அவர்களை, சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்திற்குள், ஆந்திர மாநில போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.மகன்,மகள் கதறல்!சென்னைக்கு வந்ததும் ஸ்ரீகாந்த், தன் மகன், மகளை தொடர்பு கொண்டார். 'நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டோம்; கிருஷ்ணா தான் அழைக்க வந்தார். வீட்டுக்கு சென்றதும் ஓய்வெடுத்த பின் மீண்டும் பேசுகிறோம்' எனக்கூறி, தொடர்பை துண்டித்து விட்டார்.அதன்பின், காலை 8:00 மணியளவில், மகன் சஸ்வத், தந்தை, தாயின் மொபைல் போனை தொடர்பு கொண்ட போது, 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. கிருஷ்ணாவை தொடர்பு கொண்டார். 'இருவரும் ஓய்வெடுக்கின்றனர். என்னை காய்கறி வாங்கி வர வெளியே அனுப்பினர்' என்று கூறி உள்ளார்.அதன்பின் தொடர்பு கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின், மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதுபற்றி சகோதரி சுனந்தாவுக்கு அவர் தெரிவித்துள்ளார்

.தங்களை சந்தித்து விட்டு சென்ற நிலையில், தந்தை, தாய் கொடூரமாக கொல்லப்பட்ட தகவல் அறிந்து, போலீசாரை தொடர்பு கொண்டு இருவரும் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர்.கொலையாளிகள் சிக்கியது எப்படி? சென்னை அடையாறு, இந்திரா நகரில் வசிக்கும் ஸ்ரீகாந்தின் உறவினர் ரமேஷ் பரமசிவம், நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அவசர போலீஸ் எண் 100ஐ தொடர்பு கொண்டார்.

'வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரை காணவில்லை. கார் ஓட்டுனர் கிருஷ்ணாவும் மாயமாகி உள்ளார். பயமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.போலீசார் உடனடியாக ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்றனர். வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அலமாரிகள் அனைத்தும் திறந்து கிடந்தன. இதனால், இருவரையும் மர்ம நபர்கள் கடத்தி, எங்கேயாவது அடைத்து வைத்து, பணம் பறிக்க முயற்சி செய்யலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.

வீட்டில் ரத்த வாடை அடித்தது. அத்துடன், 'டெட்டால்' ஊற்றி, தரை தளம் மற்றும் முதல் மாடியில் ரத்தக்கறைகள் கழுவி விடப்பட்டிருந்தன. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. படுக்கை அறையில், மெத்தை விரிப்புகள் மாயமாகி இருந்தன. இதனால், இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் முடிவுக்கு வந்தனர்.கிருஷ்ணாவின் மொபைல் போன் எண், 'சுவிட் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. நெம்மேலி பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.ஒரு இடத்தில், புதிதாக உடலை அடக்கம் செய்ததை போல, பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில், முக்கால்வாசி எரிந்த நிலையில், மொபைல் போன் மற்றும் கையுறை கிடந்தது.

அதனால், கிருஷ்ணா இருவரையும் கொன்று புதைத்திருக்கலாம் என, போலீசார் தீர்க்கமான முடிவுக்கு வந்தனர். ஸ்ரீகாந்தின் காரும் கிருஷ்ணாவிடம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.இந்தக் கார், நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில், உத்தண்டி பகுதி சுங்கச்சாவடியை கடந்திருப்பது, அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின், சூளைமேடு வழியாக பாடி மேம்பாலம் சென்று, ஆந்திரா நோக்கி செல்வதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்தனர்.

மதியம், 12:00 மணியளவில், ஆந்திர மாநிலம், நெல்லுார் சுங்கச்சாவடியை கடந்ததும், காரை கிருஷ்ணா ஓட்டுவதும், அருகே ரவிராய் உட்கார்ந்திருப்பதும் அங்குள்ள, 'சிசிடிவி கேமரா' பதிவு வாயிலாக தெரியவந்தது.இதுபற்றி, கூடுதல் கமிஷனர் கண்ணன், ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கார் நெல்லுாரை கடந்து விட்டது என்பதை அறிந்த அம்மாநில போலீசார், கிருஷ்ணா, ரவி ராய் செல்லும் காருக்கு, எப்படியும் பெட்ரோல் போட்டுத்தானே ஆக வேண்டும்.

அதனால், அந்த வழித்தடத்தில் உள்ள, பெட்ரோல் பங்க் அனைத்திலும், சாதாரண உடையில் போலீசாரை நிறுத்தினர்.அத்துடன், சென்னையில் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவில் பணிபுரியும் உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையிலான போலீசாரும், கிருஷ்ணாவின் காரை பின் தொடர்ந்து சென்றனர். 'கிருஷ்ணா ஓட்டிச் செல்லும் கார், நேபாளம் சென்று விட்டால் பிடிப்பது சிரமம். அதற்குள் மடக்கிவிட வேண்டும்' என, இரு மாநில போலீசாரும் அசுர வேகத்தில் செயல்பட்டனர். ரயிலில் ஏறி தப்பிவிடக்கூடாது என்பதற்காக, அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.மாலை, 5:00 மணியளவில், கிருஷ்ணா ஓட்டிச்சென்ற கார், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே சென்ற போது, அம்மாநில போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பின், உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காருக்குள், கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை, நேபாளத்தில் வாங்கப்பட்ட கத்தி, ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து அகற்றப்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள், அதற்கான, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. கார், 'டிக்கியில்' 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி பொருட்கள், வைரம், பிளாட்டினம் நகைகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு, 8 கோடி ரூபாய் இருக்கும் என்று, போலீசார் தெரிவித்தனர்.இரு மாநில போலீசாரும் நகைகளை 'வீடியோ' பதிவும் செய்தனர்.'மகனுக்காக கொலை செய்தேன்'

போலீசாரிடம் கிருஷ்ணா அளித்துள்ள வாக்குமூலம்: நான், 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் உள்ளேன். சரளமாக தமிழ் பேசுவேன். ஓட்டுனர் வேலையில், போதிய வருமானம் இல்லை. ஸ்ரீகாந்த் வீட்டில் என் தந்தை வேலை பார்த்த போதிலும், சம்பளம் மட்டுமே தருவார். மகனை பள்ளியில் சேர்க்க உதவி கேட்டேன்; செய்ய மறுத்து விட்டார். கூப்பிடும் நேரமெல்லாம், நானும் கார் ஓட்டச் செல்வேன். அதற்குரிய சம்பளத்தை தவிர, ஊக்கத்தொகை தரமாட்டார்.

ஸ்ரீகாந்த் வீட்டில், கோடிக்கணக்கில் பணம் இருப்பது எனக்கு தெரியும். என் மகனை பெரியளவில் படிக்க வைக்க முடிவு செய்தேன். நானும், ரவி ராயும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்றும் ஆசைப்பட்டோம்.அதற்காக, நல்லவர்கள் போல நடித்து, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றோம். அவர்களிடம், 40 கோடி ரூபாயை திருட வேண்டும்; அதற்கு இருவரையும் கொல்ல வேண்டும் என, நண்பருடன் சேர்ந்து பல மாதங்களாக திட்டம் தீட்டினேன். சமயம் பார்த்து கொன்று விட்டோம்.

ஆனால், பணம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது. அதற்கு பதிலாக, வீட்டில் இருந்த அனைத்து நகைகள் மற்றும் அனுராதா அணிந்திருந்த நகைகளை திருடி நேபாளம் சென்று விற்க திட்டமிட்டோம்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.'மினி' நகை கடை! கிருஷ்ணா மற்றும் ரவிராயிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை, போலீசார், சென்னை வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

அப்போது, அந்த இடமே மினி நகை கடை போல இருந்தது. 'ஒரு வேளை இந்த நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்தால், ஸ்ரீகாந்த், அனுராதா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்காது; எமன் போல் இருந்தவனுக்கு, வீட்டிலேயே அறை ஒதுக்கி கொடுத்துள்ளனரே' என, இருவரின் கொடூர மரணம் குறித்து, போலீசார் கவலை தெரிவித்தனர்.

முதியோருக்கு பாதுகாப்பு இல்லையா?

கூடுதல் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்புக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கிருஷ்ணா, ரவிராய் ஆகியோர் மீது, இதற்கு முன் எவ்வித வழக்கும் இல்லை.கிருஷ்ணா தன் வீட்டில் இருப்பது பற்றி, ஸ்ரீகாந்த் போலீசாரிடம் தெரிவிக்கவும் இல்லை. வீட்டு வேலைக்கு யாரை அமர்த்தினாலும், அவர்கள் பற்றி போலீசாரிடம் கட்டாயம் நற்சான்று பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-மே-202216:53:27 IST Report Abuse
madhavan rajan இவ்வளவு திறமையாக பணியாற்றும் காவல்துறையை தற்போதைய ஆட்சி அவர்களது கட்சிக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி நீதிமன்றங்களில் பல்பு வாங்குவதற்காக பயன் படுத்துவது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
09-மே-202213:30:53 IST Report Abuse
ThiaguK பாவம் ஓட்டுவங்கி சமூகத்தில் இல்லாததால் வருத்தப்படவில்லை வருத்தம் தெரிவிக்க கூட இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X