கோவை: 'மத்திய அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்கும் விசித்திர பழக்கம் தமிழக அரசிடம் உள்ளது. அவ்வாறே, மத்திய பல்கலைகளுக்கான பொது நுழைவுத்தேர்வையும் எதிர்க்கிறது' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மத்திய பல்கலை பொது நுழைவுத்தேர்வை(சி.யு.இ.டி.,- கியூட்) ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடியை எதிர்க்கிறோம் என்று, மத்திய அரசு எந்த திட்டத்தை முன்வைத்தாலும் அதை எதிர்க்கும் விசித்திரமான போக்கு தமிழக அரசிடம் உள்ளது. முதலில் 'நீட்' தேர்வை எதிர்த்தது; தற்போது சி.யு.இ.டி., எனும், மத்திய பல்கலை பொதுநுழைவுத்தேர்வையும் எதிர்க்கிறது.
தேசிய கல்விக் கொள்கையையும் எதிர்க்கின்றனர். இச்செயல் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். கடந்த, 2010 ம் ஆண்டிலேயே மத்திய பல்கலைகளில் மத்திய அரசால் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வே தற்போது சி.யு.இ.டி., என, மாற்றப்பட்டுள்ளது. அப்போது ஆட்சியில் இருந்து அமல்படுத்திய காங்., - தி.மு.க.,வே தற்போது அதை எதிர்ப்பது விந்தையானது.
இவர்களின் ஒரே நோக்கம் மோடியை எதிர்ப்பது மட்டுமே.சி.யு.இ.டி., மிகச்சிறந்த திட்டம். இதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற அரசுக்கு உரிமையில்லை. மாணவர்கள் பல நுழைவுத்தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்பது சி.யு.இ.டி., ன் மிகப்பெரிய நன்மை. சி.யு.இ.டி., வந்தால் தமிழக மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்வது கடினம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.
தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.13 மொழிகளில் எழுதலாம் தமிழக மாணவர்கள் 'நீட்' உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர். சி.யு.இ.டி.,யானது, மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த பல்கலைகளில் படிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. ஆனால், இது தமிழக மாணவர்களுக்கு பாதகம் என, தலைவர் ஒருவர் வாதிடுகிறார்.
சி.யு.இ.டி., தேர்வை 13 மொழிகளில் எழுதலாம். மாநிலங்கள் பல்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றினால் அது தவறானது. கடந்த, 2005ம்ஆண்டு முதல், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு(என்.சி.இ.ஆர்.டி.,) அறிமுகப்படுத்திய பொது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை தமிழகம் தவிர, மத்திய அரசு கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) உட்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன.மத்திய பொது நுழைவுத்தேர்வுகளான 'ஜே.இ.இ.,' 'நீட்' மத்திய பல்கலைகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு சி.யு.இ.டி., கிராமப்புற மாணவர்களை அதிகம் பாதிக்கும் என, மாநில உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்; இது ஆதாரமற்றது. நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் சிறந்தவர்கள். பொது நுழைவுத்தேர்வுகளை குறை கூறாமல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது அரசின் கடமை. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநிலப் பல்கலைகள் யு.ஜி.சி.,யின் மானியத்தையும், பல மத்திய அரசுத் துறைகளிடமிருந்து ஆராய்ச்சிக்கான நிதி உதவியையும் பெறுகின்றன. மேலும், மத்திய அரசு பள்ளிக்கல்விக்கும் அதிகளவு செலவிடுகிறது. கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட்டால் இச்சலுகைகள் அனைத்து கைவிட்டுப் போகும்.
தேசியகொள்கை வேண்டும்
இந்தியாவில் ஒரே நாடு, ஒரு மொழி கொள்கை உடனடியாக சாத்தியமாகாது. ஆனால் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி முதுகெலும்பாக இருப்பதால், கல்வியில் ஒரு வலுவான ஒருங்கிணைந்த தேசியக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்தியா இன்னும் வளரும் நாடாக உள்ளது. உலக அளவில் போட்டியிட வேண்டுமானால் நாடு முழுவதும் தேசியக் கொள்கையை அமல்படுத்தி கல்வி முறையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
மத்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி முன்னேற்றம் தொடரவும், தேசிய அளவிலான வேலைவாய்ப்பு பெறவும் விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. வளர்ந்த மாநிலமான தமிழகம், பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியாத நிலையில் மற்ற மாநிலங்களின் நிலை என்னவாகும்? படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளியே செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சி.யு.இ.டி., அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் செல்வதை தடுக்க எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை.
சி.யு.இ.டி., என்பது மாநில பல்கலைகளுக்கு இல்லை. இது மத்திய பல்கலைக்கு மட்டுமே. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளும் விரும்பினால் சி.யு.இ.டி., வை பின்பற்றலாம். தேசிய கல்விக் கொள்கையில், நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என, ஒரு பரிந்துரை உள்ளது. இவர்கள் அதைக் கண்டு பயப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் கூறுவது போல் மாநிலங்களின் உரிமைகளை சி.யு.இ.டி., பறிப்பதில்லை.எனவே தமிழக அரசு, எதிர்ப்பதில் நியாயமில்லை. அவ்வாறு எதிர்த்தால் அது, ஒருவகையில் மத்திய அரசின் உரிமைகளை மீறுவதாகும். சி.யு.இ.டி., வரவேற்க கூடியது. தங்கள் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தை ஆராய்ந்து விரிவுபடுத்தி சிறந்து விளங்க விரும்புவோருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE