வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, மறுவாழ்வு மையம், மாணவர் இயக்கம் என, பல முகமூடிகளை அணிந்து நாட்டில் இயங்கி வருகிறது.
'பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு, தாக்குதலில் ஈடுபட ஆட்களை அனுப்பி வருகிறது' என, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். தற்போது, சில அரசியல் கட்சிகள், அரசியல் லாபத்துக்காக, அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
கவர்னரின் பேச்சை வழக்கம் போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார். 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறியிருக்கிறார்.
'இஸ்லாமிய அமைப்பின் மீது, பயங்கரவாத இயக்கம் என்ற வீண் பழியை சுமத்தி, வெறுப்பு அரசியலை வளர்க்கிறார்' என, தனக்கே உரிய நடையில் வசைமாரி பொழிந்திருக்கிறார். அஹிம்சாவாதியான மஹாத்மா காந்தியை வில்லனாக பார்க்கும் திருமாவுக்கு, பொறுப்பான பதவியில் இருக்கும் கவர்னர் பொய் சொல்வாரா; தகுந்த ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சுமத்துவாரா என்பது கூட தெரியவில்லை. வீண் பழி சுமத்துகிறார் என, பொத்தாம் பொதுவாக புலம்ப மட்டுமே தெரிகிறது.
![]()
|
திருமா போன்றவர்கள் நல்லது, கெட்டதை ஆராய்ந்து பார்த்து பேசுவதில்லை. குறுகிய கண்ணோட்டத்துடனும், கோணல் புத்தியுடனும் எப்போதும் சிந்திக்கும், இத்தகைய புண்ணியவான்களை எல்லாம், எத்தனை அம்பேத்கர்கள் வந்தாலும் திருத்த முடியாது.