வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- தாயுடன் குழந்தையும் படுத்து துாங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
வடக்கு ரயில்வேயில், அன்னையர் தினத்தை ஒட்டி, 'லக்னோ மெயில்' ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில், புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, ரயில் பயணியர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மற்ற கோட்டங்களிலும் ஏற்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பயணியருக்கான புதிய புதிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில், ரயில்வே முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும் போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 'ஏசி' முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.