வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிக்கியுள்ள கொலையாளிகள் கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், 58; அவரது மனைவி அனுராதா, 55, ஆகியோர், இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினர். இருவரையும், அவர்கள் வீட்டில் தங்கி இருந்த கார் ஓட்டுனர் கிருஷ்ணா, 45; அவரது கூட்டாளி ரவி ராய், 39, ஆகியோர் கொடூரமாக கொன்றனர்
இவர்களின் உடல்களை, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே, நெம்மேலி சூளேரிக்காடு பகுதியில், ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்தனர். வீட்டில் இருந்த, 10 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து, ஸ்ரீகாந்தின் காரில் தப்பினர்.இவர்கள், ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியில் சென்றபோது போலீசில் சிக்கினர். இருவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசாரிடம், கிருஷ்ணா அளித்த வாக்குமூலம்:சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலத்தை விற்றதில் 40 கோடி ரூபாய் வந்துவிட்டது என, யாரிடமோ 'மொபைல் போனில்' ஸ்ரீகாந்த் பேசினார். இதை நான் கேட்டேன். இதுபற்றி ரவி ராயிடம் தெரிவித்தேன். இருவரும், 40 கோடி ரூபாயை கொள்ளையடிக்க, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரை கொலை செய்து, பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு, சொந்த மாநிலமான நேபாளம் தப்ப திட்டம் தீட்டினோம்; அதன்படி செய்தோம்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.
திருப்தியில்லைகிருஷ்ணாவின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு திருப்தி இல்லை. 'கொலையின் பின்னணியில் மர்ம கும்பல் இருக்கலாம். இந்த கொலை 40 கோடி ரூபாய்க்காக மட்டும் நடக்கவில்லை. வேறு காரணம் இருக்கலாம். ஸ்ரீகாந்த் பணத்தை வீட்டில் வைத்துக் கொள்வது இல்லை. 'டிஜிட்டல்' பண பரிமாற்றத்தில் தான் ஈடுபடுவார். இது கிருஷ்ணாவுக்கும் தெரியும்.'ஸ்ரீகாந்த் நிலம் விற்ற விவகாரத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கலாம். இவரிடம், 40 கோடி ரூபாய் பணம் இருப்பது பற்றி, வில்லங்க நபர்கள் கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோரை ஏவி கொலை செய்து இருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கன்றனர்.
இதனால், கொலையாளிகளை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். நேபாளத்தில் உள்ள கிருஷ்ணாவின் தந்தை பதம்லால் என்பவரிடமும் விசாரிக்க உள்ளனர்.சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:கொலை வழக்குகளில் பல கோணங்களில் விசாரணை நடத்துவது இயல்பு. மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில், அனைத்து வகையான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சட்டத்தின் பிடியில் இருந்து கிருஷ்ணா, ரவி ராய் இருவரும் தப்ப முடியாது. விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உறவினரிடம் உடல்கள் ஒப்படைப்புசெங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தம்பதியின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. திருப்போரூர் தாசில்தார் ராஜன், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில், டாக்டர்கள் கார்த்திகேயன், ராமச்சந்திரன் ஆகியோர், நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

பாசக்கார நாய்
அதன் பின், மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீகாந்தின் சகோதரர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. பண்ணை வீட்டுக்கு செல்லும் போதெல்லாம், அங்கு வளரும் நாய்க்கு, ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோர் உணவு அளிப்பது வழக்கம். இவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும்போது, அந்த நாய் பக்கத்திலேயே படுத்திருந்தது.
இருவரின் உடல்களையும் ஏற்றிச்சென்ற, 'ஆம்புலன்ஸ்' வாகனம், பண்ணை வீடு அருகே மணலில் சிக்கிக் கொண்டது. அப்போது, அந்த நாய் ஓடிச் சென்று ஆம்புலன்ஸ் வாகனம் முன் படுத்துக் கொண்டது. பாசப் போராட்டம் நடத்திய இந்த நாய், அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE