புதுச்சேரி : 'ஆன்மிக பூமியான தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி' என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.புதுச்சேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி வந்ததும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். 2014ம் ஆண்டிற்கு முன், தி.மு.க.,- காங்., ஆட்சி நடந்தது. தினந்தோறும் மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.2014ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்கூட நடக்கவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டி சென்றபோது, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுதலை செய்துள்ளது. நானும் கூட தலையிட்டு மீனவர்களை விடுதலை செய்துள்ளேன்.இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்பி விட்டனர். இது மீனவ சாமுதாயத்திற்கும் தெரியும். எனவே குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசக் கூடாது. உண்மை அறிந்து பேச வேண்டும். மீனவர்களை மீட்கவில்லை என்று சொல்வது மிகப்பெரிய அபாண்டம்.
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக, இருநாடுகள் இணைந்த கமிட்டி முடிவெடுக்கும். அது தொடர்பாகவும் பேசி வருகிறோம்.டீசல் விலையை குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் பேசியுள்ளோம்.மீனவர்களின் மீன் தடைக்கால நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனையும்பரிசீலனை செய்வோம்.சர்வதேச அளவிலான பன்னாட்டு கப்பல்கள் இந்தியாவில் நுழைந்து மீன்பிடிப்பதை தடுக்க சட்ட மசோதா தேவைப்படுகிறது.
இந்த மசோதவை தாக்கல் முடிவு செய்து, அது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. ஓராண்டுகால புதுச்சேரி என்.ஆர். காங்., - பா.ஜ., ஆட்சியில் பல பணிகள் நடந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாக உள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் பெயரில் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரும் என்றனர். ஆனால் எங்கே கொடுக்கப்பட்டது. அதைப்பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை.தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் பஸ்சில் ஏறி பெண்களிடம் பேசுகிறார். திராவிட மாடல் என்கின்றனர்.
ஆனால் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. இது தான் திராவிட மாடலா. தமிழ்நாடு ஆன்மிக மண். அப்படிப்பட்ட மண்ணை கெடுத்து குட்டிச்சுவராக்கியது இந்த திராவிட மாடல். தமிழக அரசு செயல்படாத அரசாங்கமாக உள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மறந்துவிட்ட அரசாக உள்ளது.கவர்னர்கள் அவர்களின் வரம்பிற்குட்பட்டு செயல்படுகின்றனர். முதல்வர், கட்சிகள் இஷ்டத்திற்கு கவர்னர் வேலை செய்ய முடியாது. அப்படி செய்யவில்லையெனில் கவர்னர் மீது குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தமிழக கவர்னர் குற்றச்சாட்டு சொல்லியுள்ளார். சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் உள்ளதைத் தான் கவர்னர் சொல்லியுள்ளார். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.