வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மயிலாடுதுறையில் சிக்கிய ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பற்றியும், அவர்களின் பின்னணி குறித்தும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
சதி திட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29; காரைக்கால் முகமது இர்பான், 22; சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, 'ஸ்கார்பியோ' கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்.
அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்.பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

துண்டு பிரசுரங்கள்
சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர்.
காரில் மடிக்கணினி, 'பவர் பாங்க், வீடியோ பேனா' உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.