வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல் 'பத்தல பத்தல' என்ற தலைப்பில் நேற்று (மே 11) வெளியானது. கமலே எழுதியுள்ள இப்பாடலில் 'கஜானாலே காசில்லை... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லை இப்பாலே.. சாவி இப்போ திருடன் கையில' என்ற வரிகள் சர்ச்சையாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சி அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகின்றனர். இந்த பதத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. இந்நிலையில் கமலின் விக்ரம் பட பாடலில் மேலே கூறிய வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளனர். வழக்கம் போல் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் இப்படத்தை வெளியிடுகிறது. தற்போது அனிருத் இசையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

கேங்குடன் கமல் ஆடிப் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. அதில் பரபரப்புக்காக மத்திய அரசை விமர்சிக்கும் கருத்துக்களை நுழைத்துள்ளார் கமல். ”கஜானாலே காசில்லை கல்லாவிலும் காசில்லை காய்ச்சல் ஜுரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லை இப்பாலே சாவி இப்போ திருடன் கையில்லை” இது சர்ச்சையாகியுள்ளது.