வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவியரிடம் 'ஹிஜாப்' அணிந்து வரக்கூடாது என ஆசிரியை கூறினார். அதற்கு முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு நேற்று நடந்தது.தேர்வு எழுத வந்த ஆறு முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் உடை அணிந்து வந்தனர். தேர்வு பொறுப்பாளர் சரஸ்வதி ஹிஜாப் எனும் உடல் முழுவதையும் மறைக்கும் உடை அணிந்து இனி தேர்வு எழுத வரக்கூடாது என கூறியுள்ளார்.

தேர்வு எழுதிய பின் மதியம் வீட்டிற்கு சென்ற மாணவியர் தங்கள் பெற்றோரிடம் அதுகுறித்து தெரிவித்தனர். அதையடுத்து முஸ்லிம் அமைப்பினர் சிலர் பள்ளிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருநாவலுார் போலீசார் பேச்சு நடத்தினர்.
பின் 'மாணவியர் ஹிஜாப் உடை அணிந்து வரலாம்; அதற்கு தடை இல்லை' என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வாக்குவாதம் செய்தவர்கள் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE