வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவாரூர்: ''தி.மு.க., அரசு மக்களுக்கான அரசு அல்ல. திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்றக் கூடாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை, 'டாக்டர் கலைஞர் சாலை' என மாற்றம் செய்யப்படும் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவ்வாறு பெயர் மாற்றம் செய்யக்கூடாது என, பா.ஜ., சார்பில், திருவாரூரில் நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
திருவாரூர் என்றால் ஆழித்தேர் தான் ஞாபகத்திற்கு வரும். இந்த தேர், ஆசியாவிலேயே பெரிய தேர். தெற்கு ரத வீதி, மனுநீதி சோழன் ரதத்தில் சென்ற வீதி. தி.மு.க., அரசுக்கு, சாலைகளை பெயர் மாற்றம் செய்யும் வியாதி பிடித்துள்ளது. இதை சாதனையாக நினைக்கிறது.குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு மன வியாதி வரும். குடும்ப அரசியல் நடத்தும் காங்., கட்சி போல், அக்கூட்டணியில் உள்ள தி.மு.க.,வும் குடும்ப அரசியல் நடத்துகிறது.

மத்திய அரசு, 44 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. மத்திய அரசு திட்டங்களில், பிரதமர் திட்டம் என்று தான் உள்ளது. அதில், மோடி பெயர் வைப்பது இல்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 60 ஆண்டுகளாக, சாலை வசதி இல்லாத மலை கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராம சாலைக்கு, அவர்கள் விரும்பும் பெயர் வைத்து சாலையை சரி செய்யட்டும். திருவாரூர் மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர். தெற்கு ரத வீதிக்கு, மனுநீதி சோழன் பெயர் சூட்ட பா.ஜ., கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.