பொள்ளாச்சி: 'ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும்,' என, ஆழியாறு, திருமூர்த்தி பாசன விவசாயிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர்.ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டத்துக்கு, ஆழியாறு தண்ணீர் கொண்டு செல்ல கடும் ஆட்சேபனை கிளம்பியுள்ளது.

ஆழியாறு விவசாயிகளை தொடர்ந்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர், தலைமை செயலர் உள்ளிட்ட, 16 பேருக்கு மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:
ஆழியாறு பாசனத்தில், 50,400 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பாலாறு படுகையில், 2,800 ஏக்கர் பழைய ஆயக்கட்டுக்கும், 3,77,152 ஏக்கர் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கும் இரண்டு ஆண்டுக்கொரு முறை நீர் வினியோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் தண்ணீரை பொருத்து, ஒன்றரை முதல், மூன்று சுற்று வரையும் நீர் வழங்கப்படுகிறது. கடந்த, மூன்று ஆண்டுகளாக நல்ல மழைப்பொழிவு இருந்ததால், நான்கு அல்லது ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது.

ஆழியாற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு, 50 கனஅடியும், திருமூர்த்தி அணையில் இருந்து, பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு, 30 கனஅடி நீரும் எடுக்கப்படுகிறது. பி.ஏ.பி., திட்டம், 50.05 டி.எம்.சி., தண்ணீர் வரவை எதிர்பார்த்து, இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியினால் உருவான திட்டமாகும். இத்திட்டத்தில் கேரளத்துக்கு ஆண்டுதோறும், 19.5 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 30.5 டி.எம்.சி.,க்கு பதிலாக, 22 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அதில், 3 டி.எம்.சி., குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. மீதம் உள்ள, 19 டி.எம்.சி., தண்ணீரை கொண்டு, 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்கிறோம். வறட்சியான கால கட்டத்தில், சாகுபடி பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடுகிறோம்.
கடந்த ஆட்சியில்...
கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம், ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்தார். திட்ட ஆய்வுக்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகளுக்கு தெரியாது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சட்டசபையில் நடந்த நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையின் போது, 600 கோடி ரூபாய் செலவில் பி.ஏ.பி., திட்டத்தில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அமைச்சர் நேரு அறிவித்தார்.
இந்த அறிவிப்பை முதல்வர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மறு பரிசீலனை செய்தால், பி.ஏ.பி., திட்ட விவசாயிகள் காப்பாற்றப்படுவர்.
ரத்து செய்யுங்க!
இத்திட்டம், பி.ஏ.பி., விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையும், மனவலியும் ஏற்படுத்தி உள்ளது. ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமலும், 40 ஆண்டுகளாக பி.ஏ.பி., ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல், அப்போதைய அ.தி.மு.க., அமைச்சர் வேலுமணி, தற்போதைய தி.மு.க., அமைச்சர் சக்கரபாணியும் தவறான அறிவிப்புகளை செய்தது, பி.ஏ.பி., விவசாயிகளிடையே, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. அதனால், திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழியாறுக்கு குறி வைப்பது ஏன்?
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு காவேரி ஆறு, பரப்பலாறு ஆறு, பாலாறு - பொருந்தலாறு ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு மிக அருகில் உள்ள அமராவதி ஆற்றை விட்டு, 100 கி.மீ., தொலைவில் உள்ள ஆழியாறு ஆற்று நீருக்கு எதற்காக குறி வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வேண்டுமென்றால் காவிரியில் இருந்தோ அல்லது மிக அருகில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம். அருகே உள்ள பாலாறு - பொருந்தலாறு அணையில் இருந்தும், பரப்பலாறு அணையில் இருந்தும் திட்டங்களை தீட்டலாம். இதை விட்டு, பி.ஏ.பி., விவசாயிகளை வஞ்சிக்கப்பார்ப்பது தவறு. விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
முதல்வர் - அமைச்சர் முரண்பாடு!
கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் நடத்திய விவசாயிகள் முறையீட்டுக் கூட்டங்கள், வேளாண் துறை அமைச்சர் தலைமையில் நடந்த, நிதிநிலை அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திலும் இப்பிரச்னை தெரிவிக்கப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சரிடம், விவசாய சங்கங்கள் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. கடந்த, 6ம் தேதி சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில், பி.ஏ.பி., திட்ட விவசாயிகளுக்கே நீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வழங்க இயலாது, என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கடந்த, 30ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில், பி.ஏ.பி., திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு, 930 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE