வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: கம்பி, மின்சாதனம் மற்றும் பிளம்பிங் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக புதுச்சேரியில் கட்டுமான தொழில் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் நிலப்பரப்பு குறைவாக இருந்த போதிலும், மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன.

1.50 லட்சம் தொழிலாளர்கள்
அதற்கேற்ப வீடு கட்டுமான பணியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில், கட்டுமானத் துறையில் 1500 பொறியாளர்கள், 900க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மற்றும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் ஆண்டிற்கு ரூ.1,000 கோடி அளவிற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த கட்டுமான பணி, கடந்த ஓராண்டாக மெல்ல வேகமெடுத்து வந்தது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் இருந்து தொழிலா ளர்கள் அதிகளவில் அழைத்து வரப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
விலை உயர்வு
இந்நிலையில், கட்டுமானத் துறையின் மூலப் பொருட்களான செங்கல், கம்பி, சிமென்ட், மணல், ஜல்லி, எம்.சாண்ட், மின்சாதனப் பொருட்கள், ஹார்டுவேர்ஸ், டைல்ஸ், பிளம்பிங் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, கடந்தாண்டு ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்கப்பட்ட ஒரு டன் கம்பி, தற்போது ரூ.75 ஆயிரம் முதல் 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டில் கம்பியின் விலை 90 முதல் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே போன்று, மின்சாதனப் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், 30 முதல் 35 சதவீதமும், பெயின்ட், சானிட்டரி பொருட்கள், செங்கல், சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் 10 சதவீதத்திற்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், சதுர அடிக்கு ரூ.1,200 முதல் 1,400 விரை இருந்த கட்டுமானச் செலவு, தற்போது ரூ.2,000 முதல் 2,200 வரை உயர்ந்துள்ளது.

ஒப்பந்ததாரர்கள் தவிப்பு
இந்த விலை உயர்வால் வீடு கட்டி வந்தவர்கள் பணிகளை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஒப்பந்த அடிப்படையில், கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு பணி களை டெண்டர் எடுத்தவர்களும் பணிகளை நஷ்டமின்றி முடிப்பது எப்படி எனத் தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.இதன் காரணமாக தனியார் கட்டுமான பணிகள் மட்டுமன்றி அரசு பணிகளும் தேக்கமடைந்து வருகிறது. மேலும், புதிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால், கட்டுமான மூலப் பொருட்களின் விலை உயர்விற்கு ஏற்ப, திட்ட மதிப்பீட்டை மாற்றி அமைத்திட பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE