சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 518.17 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 முடிவுற்ற திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் 10 திட்டப் பணிகள், சென்னை குடிநீர் வாரியத்தின் ஐந்து பணிகள், தமிழக குடிநீர் வாரியம் சார்பில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாகம் சார்பில் நான்கு திட்டப் பணிகள் ஆகியவற்றை, முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்.
அனுமதி அட்டை
சென்னை அடையாறு உப்பங்கழி மற்றும் முகத்துவாரத்தின், 358 ஏக்கர், அதன் தொடர்ச்சியாக, திரு.வி.க., பாலத்திற்கு கிழக்கே அமைந்துள்ள, அடையாறு முகத்துவாரப் பகுதிகளையும் சீரமைக்க, 100 கோடி ரூபாய்க்கு, அரசால் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 58 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள, அடையாறு உப்பங்கழியின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, 'தொல்காப்பியப் பூங்கா' சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டது.தற்போது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையால் பராமரிக்கப்பட்டு வரும், தொல்காப்பியப் பூங்காவில், 3.20 கி.மீ., நீளத்திற்கு, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அட்டையை நேற்று முதல்வர் வழங்கினார்.
அரசு பணி
சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், பேரூராட்சி ஆணையரகம் ஆகியவற்றில் பணிக் காலத்தில் இறந்த, 126 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை பணிநியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.கொரோனா தொற்றால் இறந்த, 65 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஆறு ஒப்பந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, 16.55 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதற்கான காசோலைகளை, முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, தலைமைச் செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE