ரயில்வே மேம்பாட்டுக்குழு குற்றச்சாட்டு
கோவையில் பொது போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கொங்கு ரயில்வே மேம்பாட்டுக்குழு, குற்றம் சாட்டியுள்ளது. முக்கிய தொழில் மையமாக விளங்கும் கோவையில் ரயில்வே வசதிகளை மேம்படுத்துவது, வெறும் கனவாகவே உள்ளது. இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுப்போராட்டம் நடத்தி வரும் கொங்கு ரயில்வே மேம்பாட்டுக்குழு, கோவை ரயில்வே துறையால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதை, பல்வேறு தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தியுள்ளது. இதில் சென்னையையும், கோவையையும் ஒப்பிட்டு ஓர் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்து வசதிகளில் இவ்விரு நகரங்களுக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பது தெளிவாகிறது. பரப்பளவில் 426 சதுர கி.மீ., அளவுள்ள சென்னை மாவட்டத்தில் 71 லட்சம் பேரும், 4723 சதுர கி.மீ., பரப்பளவுள்ள கோவை மாவட்டத்தில் 45 லட்சம் பேரும் வசிக்கின்றனர். சுற்றுவட்டார மாவட்டங்களையும் சேர்த்து, இந்த நகரங்களில் வசிப்போர், வலம் வருவோரைச் சேர்த்துக் கணக்கிட்டால், சென்னையில் (7958 சதுர கி.மீ.,) ஒரு கோடியே 34 லட்சம் பேரும், கோவையில் (19,720 சதுர கி.மீ.,) ஒரு கோடியே 29 லட்சம் பேரும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில் உட்பட 227 ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து, 124 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. கோவையில் 18 ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன. வெறும் காகிதத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில், 39 ஸ்டேஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கோவையில் 1956ல் திறக்கப்பட்ட பீளமேடு ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின் புதிதாக ஒரு ஸ்டேஷனும் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில், 15 ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு என பழைய கோவை மாவட்டத்தைக் கணக்கிட்டால், 26 ரயில்வே ஸ்டேஷன்களை ரயில்வே துறை மூடியுள்ளது. சென்னையில் 647 கி.மீ., இருக்கும் ரயில்வே பாதையில், 1.06 கி.மீ.,க்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. கோவையில் 160 கி.மீ., துாரமே உள்ள ரயில்பாதையில் 9.83 கி.மீ., துாரத்திற்கு ஒன்றாகத்தான், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. கோவையில் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு தேர்வு செய்து, 12 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு பைசா கூட இரண்டு அரசுகளும் செலவிட வில்லை. இவ்வாறு, பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில், கோவையை மத்திய அரசின் ரயில்வே துறையும், மாநில அரசும் போட்டி போட்டு புறக்கணித்துள்ளன.
-நமது சிறப்பு நிருபர்-
-நமது சிறப்பு நிருபர்-
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement