திருப்பூர் : தாராபுரத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழைக்கு, கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நனைந்தன.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த, இரு நாட்களாக இரவு நேரத்தில் பெய்த தொடர் மழையால், நான்கு கொள்முதல் நிலையங்களில், ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.திறந்தவெளி நிலையங்களுக்கு அரசு போதியளவில் தார்ப்பாய் வழங்கவில்லை என்றும், வாங்கப்பட்ட மூட்டைகளை ஏற்றுவதற்காக லாரிகள் வரவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ''10 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. எடுத்து செல்ல லாரியும் வரவில்லை. மழை காரணமாக, அலங்கியம் நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு கீழ் தண்ணீர் தேங்கி நனைந்தது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நுகர்பொருள் வாணிக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டதற்கு, ''தற்போது, 820 டன் இருப்பு உள்ளது. நெல் மூட்டைகளை மில்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அலங்கியத்தில் நெல் மூட்டைகளுக்கு அடியில் தண்ணீர் தேங்கியதால், 30 மூட்டைகள் நனைந்து விட்டது. உடனடியாக மில்லுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE