மொபட் மீது கார் மோதி
கல்லுாரி மாணவர் பலி
மொடக்குறிச்சி, மே 13-
கொடுமுடி அருகேயுள்ள வெங்கம்பூர், கல்வெட்டுப்பாளையம் சாலையை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரமூர்த்தி மகன் மனோஜ்குமார், 21; ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்தார். ஊஞ்சலுார், காரணாம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் மகன் ஸ்ரீதர் 20; இருவரும் நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து, ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் வீடு திரும்பினர். பழுது ஏற்பட்டதால் சரி செய்து கொண்டு, ஊஞ்சலுார் நோக்கி இரவில் சென்றனர். கணபதிபாளையம் அருகே பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் அமர்ந்து பயணித்த மனோஜ்குமாருக்கு தலை, முகம் போன்ற இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. ஸ்ரீதருக்கு
லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு
அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மனோஜ்குமார் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
உணவு பாதுகாப்பு அலுவலர்
ஓட்டல்களுக்கு அறிவுறுத்தல்
ஈரோடு, மே 13-
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலகம் சார்பில், ஓட்டல் உரிமையாளர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் பேசியதாவது: ஓட்டல், உணவு பொருள் தயாரிப்போர், விற்பனை செய்வோர் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என்றார். பயிற்சியாளர் டாக்டர் பிரவீன் பேசியதாவது: பிரிட்ஜ் பிரீசரில் மீட்டர் பொருத்தி, வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். ஷவர்மா, சமைத்த கறிகளை பிரிட்ஜில் வைப்பது தவறு. பழைய கோழிக்கறி, தலை, கால்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுக்கு தினமும் வாங்கி பயன்படுத்துங்கள். ஓட்டல் நடத்துவோர் வெட்டி வைத்த மீன், கறிகளை வாங்காதீர். தண்ணீரில் உள்ள பாக்டீரியா மூலமே ஷவர்மா போன்ற உணவுகள் விஷமாகிறது. இவ்வாறு பேசினார்.
தேங்காய் உலர் களங்களில்
மழையால் பாதித்த பணி
காங்கேயம், மே 13-
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக வாகனம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது லேசான சாரல் மழையும், இரவில் மிதமான மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பகல் முழுவதும் குளிர் காற்று வீசி மக்களை உறைய வைத்தது. குறிப்பாக நோயாளிகள், முதியவர்கள் அவதிப்பட்டனர். அதேசமயம் அவ்வப்போது விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இதனால் காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தேங்காய் உலர் களங்களில், தேங்காய் உலர்த்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏற்கனவே உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை, குவியல் குவியலாக களங்களில் குவித்து, தார்ப்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கேயம், சுற்றுவட்டார களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணி பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE