லாரி கவிழ்ந்ததில்
பெண் தொழிலாளி பலி
ஆத்துார், மே 13-
வாழப்பாடியை சேர்ந்த, டிரைவர் குமார், 32. நேற்று, வாழப்பாடி, பொன்னாரம்பட்டி, வேப்பிலைப்பட்டியை சேர்ந்த, 12 கூலித்
தொழிலாளர்களுடன், கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்துக்கு தேங்காய் அறுவடை பணிக்கு, 'டாடா - 407' மினி லாரியில் அழைத்துச்சென்றார். தேங்காய் 'லோடு' ஏற்றிக்கொண்டு, ஆத்துார் புறவழிச்சாலை வழியாக, நேற்று மாலை, 4:00 மணிக்கு, வாழப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சந்தனகிரி பிரிவு சாலை அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பொன்னாரம்பட்டியை சேர்ந்த இளங்கோ மனைவி சந்திரா, 40, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். டிரைவர் குமார், பழனியம்மாள், 55, பாப்பா, 60, பிரவீன், 19, விஜய், 47, கொளஞ்சி, 37, உள்பட, 11 பேர் காயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
உதவுவதாக நடித்து
நகை திருடிய ஆசாமி
சேலம், மே 13-
சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்தவர் சுசீலா, 70. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ் அலுவலகம் செல்ல, ஆட்டோவில் ஏற முயன்றார். அப்போது, 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி, சுசீலாவின் பையை எடுத்து ஆட்டோவில் வைப்பதாக கூறி, நைசாக எடுத்துச்சென்று விட்டார். பையில், சுசீலா, 3 பவுன் தங்க சங்கிலி வைத்திருந்தார். இதுகுறித்து அவர் புகார்படி, அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், கொண்டலாம்பட்டி அருகே, பெரியபுத்துாரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. நேற்று முன்தினம் மாலை, வீடு அருகே நடந்து சென்றார். 'அப்பாச்சி' பைக்கில் வந்த இருவர், மகேஸ்வரி அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மக்கள் சந்திப்பு திட்ட முகாம்
19 கிராமங்களில் குழு ஆய்வு
ஆத்துார், மே 13-
தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். அதில் மணிவிழுந்தான் வடக்கு, தெற்கு, வசந்தபுரம், ராமசேஷபுரம், ராமானுஜபுரம், முட்டல், பூமரத்துப்பட்டி, ரெட்டிக்கரடு, நேரு நகர், சக்தி நகர், எம்.ஜி.ஆர்., நகர், குமாரபாளையம் என, 19 கிராமங்களில், 19 பேர் அடங்கிய முதன்மை அலுவலர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறை கேட்டறிந்தனர். இதையடுத்து, அந்த அலுவலர்கள், மக்களின் பிரச்னை, தேவையான திட்டங்கள் குறித்து, முகாமில் எடுத்துரைத்தனர். பின், கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர், வருவாய், வேளாண் உள்ளிட்ட துறைகள் சார்பில், 195 பயனாளிக்கு, 3.60 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE