ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கான, கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டத்தை, காணொலி காட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, ஏழு டவுன் பஞ்.,கள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்காக கொடிவேரி அணையை நீராதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டம், 224 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது ஊரக பகுதியில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு, 55 லிட்டர் வீதம், டவுன் பஞ்., பகுதியில், 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
கொடிவேரி கதவணைக்கு மேல், பவானி ஆற்றின் கரையில் நீரேற்று நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, 549 கி.மீ., நீளத்துக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்று, குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த, 2018 நவ.,7 ல் பணி உத்தரவு வழங்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சியில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில், கலெக்டர்
கிருஷ்ணனுண்ணி வரவேற்றார். இதில் சின்னவீரசங்கிலியை சேர்ந்த கண்ணம்மா தங்கவேல் என்ற பயனாளி, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
விழாவில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE