செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : மே 13, 2022 | |
Advertisement
இன்று கும்பாபிஷேகம்சேலம்: தென் அழகாபுரத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. அதை முன்னிட்டு, கணபதி ஹோமம், தீர்த்தக்குட, முளைப்பாலிகை ஊர்வலம், விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், கண் திறப்பு, யாகவேள்வி ஹோமம் ஆகியவை நேற்று நடந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள் அய்யனாரப்பன், பரிவார தெய்வங்களுக்கு

இன்று கும்பாபிஷேகம்
சேலம்: தென் அழகாபுரத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. அதை முன்னிட்டு, கணபதி ஹோமம், தீர்த்தக்குட, முளைப்பாலிகை ஊர்வலம், விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், கண் திறப்பு, யாகவேள்வி ஹோமம் ஆகியவை நேற்று நடந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள் அய்யனாரப்பன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும்.

விமான நிலைய விரிவாக்க பணி ஆய்வு
ஓமலுார்: காமலாபுரத்தில் உள்ள, சேலம் விமான நிலையம், 128 ஏக்கரில் செயல்படுகிறது. அதன் விரிவாக்க பணிக்கு, 571 ஏக்கர் நிலம், காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன. அதற்கான பணி, இரு ஆண்டாக நடக்கிறது. பொட்டியபுரத்தில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில், வீடு, தோட்டம், மரங்களை, சேலம் டி.ஆர்.ஓ., கவிதா(பொ), நேற்று ஆய்வு செய்தார். ஓமலுார் தாசில்தார் வள்ளமுனியப்பன், நில அளவையர்கள் உடனிருந்தனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா
சேலம்: குகை, கண்ணனுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் பொங்கல், அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம், சத்தாபரணம் நடந்தது. நேற்று, சக்தி அக்னி கரகம், அம்மன் ஆற்றுக்கு செல்லுதல் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

சிறுமியர் இல்லத்தில் அன்னதானம்
ஓமலுார்: ஓமலுாரில், சுப்பராயன் அறக்கட்டளை சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின், 70வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், பாத்திமா மேல்நிலைப்பள்ளி இதயாலயா சிறுமியர் இல்லத்தில் உள்ள மாணவியருக்கு, காங்., கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அன்னதானம் வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலர் ராஜிவ்காந்தி உடனிருந்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
கெங்கவல்லி: தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் சில தனியார் பஸ்கள், தட அனுமதி இருந்தும் இயக்காமலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு இயக்காமலும் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள், நேற்று பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அதில், அனுமதி இருந்தும் இயக்கப்படாத தனியார் பஸ் டிரைவர்களிடம், பஸ்களை உரிய நேரத்தில் இயக்க எச்சரித்தனர். தொடர்ந்து, பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் குறித்து ஆய்வு
செய்தனர்.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்: பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், சேலம், பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஓய்வு பெற்றவர்களின் பிரச்னைகளை தீர்க்க, இயக்ககத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தல்; ஓய்வூதியர் பணிபுரிந்த இடங்களில் தணிக்கை பெயரில் பிடித்தம் செய்வதை தவிர்த்தல்; ஓய்வு பெற்றபின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சேலம் மண்டல தலைவர் பெருமாள், செயலர் கருணாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

செ.பாளையத்தில் அமைச்சர் ஆய்வு
ஆத்துார்: செல்லியம்பாளையத்தில், தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடு குறித்து, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட பொறுப்பாளர்களான கிழக்கு சிவலிங்கம், மேற்கு செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

மண்டல செய்தி தொடர்பாளர் நியமனம்
சேலம்: மக்கள் நீதி மய்யம், சேலம் மாவட்ட ஊடகம், செய்தி தொடர்பாளராக அனிதா பணிபுரிந்தார். அவர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில், 2023 பிப்ரவரி வரை தொடர்வார் என, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்க!
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சிக்கு, இருப்பாளி - காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது நெருஞ்சிப்பேட்டை தடுப்பணையில் கதவணை பராமரிப்பு பணி, 28 வரை நடக்கிறது. இதனால், நகராட்சிக்கு இரு நாளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் குடிநீர் வினியோகிக்க உள்ளதால், மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆம்புலன்ஸில் குவா குவா!
ஓமலுார்: பாகல்பட்டியை சேர்ந்த, கட்டட தொழிலாளி வினோத்குமார், 35. இவரது மனைவி எஸ்தர், 30. இவர்களுக்கு, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எஸ்தர், கடந்த, 10 நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட, '108' அவசர கால ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். வழியில், எஸ்தருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின், ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X