மாரியம்மன் கோவில் திருவிழா
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூங்கரகம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, அங்க பிரதட்சனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மரக்கன்றுகள் பெற அழைப்பு
அரூர்: அரூர் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க விளம்பர சரகம் சார்பில், தேக்கு, சிவப்பு சந்தனம், மகாகனி, ஈட்டி, வேங்கை, இலுப்பை, வேம்பு, புங்கன், மலைவேம்பு, குமிழ், நாவல், புளியன், நெல்லி, சிசு ஆகிய மரக்கன்றுகள் வினியோகிக்கப்படுகிறது. பருவ மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், 98658 84323, 90801 64037, 94862 45736 ஆகிய மொபைல் எண்களில், அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மா.கம்யூ., கட்சி போராட்டம்
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பஞ்., அலுவலகம் முன், சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபனை மனுக்கள் கொடுக்கும் போராட்டத்தில், மா.கம்யூ., கட்சியினர் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் போராட்டம் குறித்து பேசினர்.
2 கள்ளத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு
மாநில கோகோ போட்டிக்கு தேர்வு
தர்மபுரி, மே 13-
மாநில அளவில் நடக்கவுள்ள கோ-கோ போட்டிக்கு, தர்மபுரி மாவட்ட அணி தேர்வு போட்டிகள் நடக்க உள்ளது என, இதன் மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு கோ-கோ விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான கோ--கோ விளையாட்டு போட்டி மே, 18, 19 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது.
இதையடுத்து, தர்மபுரி மாவட்ட அணிக்கான தேர்வு போட்டிகள், நாளை மறுநாள், தர்மபுரி அடுத்த சவுளூர் கமலம் இண்டர்நேஷ்னல் பள்ளியில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் இதில், 14 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். கலந்து கொள்ள வரும் மாணவர்கள், ஆதார்கார்டு ஜெராக்ஸ், பிறப்பு சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை, மூன்று போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.,
அவசர செயற்குழு
கிருஷ்ணகிரி, மே 13-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், ஓசூர் மீரா மஹாலில் இன்று (13ம் தேதி) காலை, 10:00 மணியளவில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடக்கிறது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஓசூர் வருகை, தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டங்கள் நடத்துவது மற்றும் கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்
10 பேர் மீது வழக்கு
தர்மபுரி, மே 13-
தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், புரட்சிகர சோஷலிட் கட்சி சார்பில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் காசியம்மாள் தலைமையில், பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றியும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக, காசியம்மாள், கட்சியின் மாவட்ட தலைவர் புகழேந்தி, மாவட்ட விவசாய சங்க தலைவர் மேகநாதன் உள்பட, 10 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி., நிறுவனம் சார்பில், திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லுாரியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும், 60 ஏழை, எளிய மாணவியருக்கு தலா, 7,500 ரூபாய் வீதம் மொத்தம், 4.50 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை மற்றும் கல்லுாரியின் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் குழந்தைதெரசா தலைமை வகித்தார். ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ், கல்வி உதவித்தொகை மற்றும் ஸ்மார்ட் உபகரணங்களை வழங்கினார்.
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி, வன்னியர் திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட, பா.ம.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:
நாளை மாலை, 4:00 மணிக்கு தர்மபுரி மாவட்ட, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி பங்கேற்று பேச உள்ளார். தர்மபுரிக்கு வருகை தரும் அவருக்கு, கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், முன்னாள் எம்.பி.,க்கள் செந்தில், பாரிமோகன், வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தீத்தடுப்பு விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள எம்.சி.பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவண்ணாமலை சாலையிலுள்ள அரசு ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கிருஷ்ணகிரி தீயணைப்பு துறை சார்பில், தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. நிலைய அலுவலர் மார்டின் தலைமை வகித்து, செயல்முறை விளக்கம் அளித்தார். இதில், மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மோதல்; கூலித்தொழிலாளி கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராமாபுரம் அடுத்த ஜக்கரப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ், 39; அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 55; இருவரும் கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில் கடந்த, 6ல் ஏற்பட்ட தகராறில் கண்ணன், சந்திரபிரகாஷை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். சந்திரபிரகாஷ் புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்தனர்.
மயங்கி விழுந்தவர் சாவு
கிருஷ்ணகிரி: ஆந்திர மாநிலம், எஸ்.ஆர்.புரம் அடுத்த மேதுவடாவை சேர்ந்தவர் பிரபு, 30. கிருஷ்ணகிரியில் தங்கி மாங்கூழ் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த ஒரு வருடமாக சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்த அவர் கடந்த, 10ல், நிறுவனத்தில் பணியாற்றியபோது மயங்கி விழுந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE