செய்திகள் சில வரிகளில்... கரூர்

Added : மே 13, 2022
Advertisement
அம்மனுக்கு சிறப்பு பூஜைகிருஷ்ணராயபுரம், மே 13-கிருஷ்ணராயபுரம் அங்காளம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகே, அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த

அம்மனுக்கு சிறப்பு பூஜை
கிருஷ்ணராயபுரம், மே 13-
கிருஷ்ணராயபுரம் அங்காளம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகே, அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டார
பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டம்
கரூர், மே 13---
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, வேட்டமங்கலம் பஞ்., அலுவலகத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த, சிறப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தோட்டக்கலை துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்தார். வட்டார வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகதுறை, கால்நடைத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையின் திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.
கூட்டத்தில். வேளாண் துறை அலுவலர் ரேணுகாதேவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜவேல், தோட்டக்கலை துறை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நந்தகுமார், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் உஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

காட்டுவாரி துார் வாரும் பணி
கிருஷ்ணராயபுரம், மே 13-
கோவக்குளம் காட்டுவாரி வாய்க்காலை துார்வாரும் பணி தீவிரமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் வழியாக காட்டுவாரி வாய்க்கால், மகாதானபுரம் வரை செல்கிறது. இந்த வாய்க்காலுக்கு மாயனுார் காவிரியாற்றிலிருந்து, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் மூலம், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த பாசன நீரைக் கொண்டு, கோவக்குளம், மகாதானபுரம், பிச்சம்பட்டி ஆகிய பகுதி நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால், விவசாயிகள் சோளம், நெல், காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது, காட்டுவாரி வாய்க்காலில் அதிகமான புதர்கள் மண்டி இருந்ததால் தண்ணீர் குறைவாக சென்றது. இந்நிலையில், பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்கால் முழுவதும் துார் வாரும் பணி நடந்தது.

இரு தரப்பினர் மீது வழக்கு
குளித்தலை, மே 13-
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பஞ்., பொது நிதியிலிருந்து கதிரடிக்கும் களம் கட்டப்பட்டது. இந்த களத்தை ஆக்கிரமித்ததாக, அதே ஊரை சேர்ந்த வடிவேல்-மல்லிகா குடும்பத்தாருக்கும், முருகன் குடும்பத்தாருக்கும் கடந்த, 3ல் பிரச்னை ஏற்பட்டது.
போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது சரியான ஒத்துழைப்பு தராமல், தொடர்ந்து பிரச்னை செய்து வந்தனர். இதனால், மல்லிகா, பெரியசாமி, முரளி, வசந்தகுமாரி; மற்றொரு தரப்பை சேர்ந்த முருகன், தவமணி, காமராஜ், விந்தியா ஆகிய இருதரப்பினர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொழிலாளி கைது
குளித்தலை, மே 13-
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி, குடிதெருவை சேர்ந்தவர் சங்கர், 22; கூலித்தொழிலாளி. இவர், திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளியின், 17 வயது மகளை காதலித்து, கடந்த, 2020 ஜூன், 26ல் திருமணம் செய்து கொண்டார்.
சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக, 'சைல்டு லைனுக்கு' தகவல் வந்தது. அதன்படி, குளித்தலை யூனியன் விரிவாக்க அலுவலர் பூங்கோதை கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை திருமண சட்டத்தின்படி சங்கரை கைது செய்தனர்.

கொலை மிரட்டல்: 2 பேர் கைது
குளித்தலை, மே 13-
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கருங்களாப்பள்ளி கடைத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 53. டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 10ல், அதே ஊரை சேர்ந்த சிவகுமார் மகன் ஆகாஷ், 20, இவரது தாயார் முத்துலட்சுமி, 41, இருவரும் சேர்ந்து, டீ கடை முன், தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். அப்போது, 'இங்கு யாரும் பேச வேண்டாம்' என, தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு, ஆகாஷ் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, விஜயகுமார் கொடுத்த புகார்படி, ஆகாஷ், முத்துலெட்சுமியை கைது செய்தனர்.
சீரான விலையில்
பூக்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், மே 13-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பூக்கள் விலை சீரான விலையில் விற்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மகிளிப்பட்டி, காட்டூர், எழுதியாம்பட்டி, செக்கணம், திருக்காம்புலியூர், மாயனுார் ஆகிய இடங்களில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில், தற்போது மல்லிகை, முல்லை, விரிச்சிப்பூ, சின்ன ரோஜா, செண்டுமல்லி ஆகிய பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த வாரத்திலிருந்து, பூக்கள் சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மல்லிகை பூ கிலோ, 300 ரூபாய்; முல்லை, 250, விரிச்சி பூ, 90, சின்னரோஜா, 120, செண்டு மல்லி, 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச செவிலியர்
தின பேரணி
கரூர், மே 13---
சர்வதேச செவிலியர் தின விழாவை முன்னிட்டு, கரூர் லைட் ஹவுஸ் கார்னரில், தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சாார்பில், பேரணி நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். இப்பேரணி, லைட் ஹவுஸ் கார்னரில் தொடங்கி, கரூர் தாலுகா அலுவலகம் வரை நடந்தது. அங்கு, 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில், மாவட்ட செயலாளர் நிதியா, துணை தலைவர் பிரவீனா உட்பட பலர் பங்கேற்றனர்.
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
மாநில தலைவர் பங்கேற்பு
கரூர், மே 13---
கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், புதிதாக பொறுப்பேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, கட்சியின் நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என, ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத், நவீன்குமார், ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ராஜாளி செல்வம், ராமநாதன் பிள்ளை, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன், மாவட்ட மகளிரணி தலைவி மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.
பொக்லைன்
ஆப்பரேட்டர் மாயம்
குளித்தலை, மே 13-
குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., தெற்கு மையிலாடியை சேர்ந்தவர் கோவிந்தன், 54; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் கோபி, 26. இவர் துாத்துக்குடியில் பொக்லைன் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். துாத்துக்குடியில் கடந்த, 7ல் வேலையை முடித்துவிட்டு, 8ல் வீட்டுக்கு வந்தவர் வெளியில் சென்றார். அதன் பின், அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X