செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழம் விற்பனை, படுஜோராக நடந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கரூர்-கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட, ஜவஹர் பஜார், காந்திகிராமம் உட்பட பல்வேறு இடங்களில், மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. கடந்த காலங்களில் மாம்பழம் சாப்பிட்டால், நாக்கு தித்திக்கும். தற்போது வரும் மாம்பழங்களை உண்டால், நாக்கு புண்ணாகிறது. வெளித்தோற்றத்தில் பழத்தின் சாயல் இருக்கும், சுவைத்தால் சுண்ணாம்பு ருசி. மாங்காய்களை பழுக்க வைக்க, 'கார்பைடு' கற்களை விட மலிவாக கிடைக்கும், திரவம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை, 3 லி., தண்ணீரில், 100 மி.லி., சேர்த்தால், மூன்று டன் மாங்காய்களை, பழத்தின் தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடலாம். இது போன்ற பழங்களை வாங்கி உண்பதால், உடல் நலத்துக்கு பாதிப்பு உண்டாகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாம்பழம் சீசனின் போது, அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தி செயற்கை முறை பழங்களை அழிக்கின்றனர். இருந்தும், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், மாவட்ட உணவுபாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர், செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதி காத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர் ஒருவர் கூறியதாவது:
மாம்பழத்தின் வெளித்தோற்றத்தை வைத்து, கண்டுபிடிப்பது சிரமம் தான். கறுப்பு நிற புள்ளிகள் இருந்தால், அவை செயற்கை முறையில் பழுக்க வைத்தவையாகும். அவற்றை தவிர்ப்பது நல்லது. மாம்பழங்களை கவனித்து வாங்க வேண்டும். கால்சியம் கார்பைடு வைத்து பழுக்க வைக்கும் பழங்களை உண்பதால், வாந்தி, கை, கால் மதமதப்பு, வயிற்றுவலி, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம். கர்ப்பிணிகள் உண்டால் குழந்தைக்கும் பாதிப்பு வரலாம். நீண்ட காலம் தொடர்ந்து உண்டால், புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. உணவு பாதுகாப்பு துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE