''கீழ்பவானியில் நவீன சீரமைப்பு திட்டத்தில் ஒரு தரப்பு விவசாயிகளுக்கு அமைச்சர் முத்துசாமி ஆதரவாக செயல்படுகிறார்,'' என்று, மற்றொரு தரப்பு விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில், 710 கோடி ரூபாயில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டப்பணிக்கான ஆயத்தப்பணி ஓராண்டாக நடக்கிறது. 'கான்கிரீட் தளம், கரை அமைத்தால் கசிவு நீர் பாசனம், நிலத்தடி நீராதாரம் பாதிக்கும்' என, ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்க்கின்றனர். 'நவீனமாக்கினால் கடைமடை வரை நீர் செல்லும்; வீணாகும் நீர் தடுக்கப்படும். பாசனதாரர்கள் முழுமையாக பயன்பெறுவதால், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, மற்றொரு தரப்பு விவசாயிகள் போராடுகின்றனர்.
இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, சட்டசபை தேர்தலுக்கு முன், 'விவசாயிகளை கலந்து திட்டப்பணி மாற்றி செயல்படுத்தப்படும்' என்றார். தற்போது விவசாயிகள் விரும்பும் இடத்தில் மட்டும் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமையும் என்கிறார். அதற்கேற்ப கலெக்டர் அலுவலகத்தில், கான்கிரீட் தள எதிர்ப்பு விவசாயிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் '200 இடங்களுக்கு மேல் கான்கிரீட் தளம், கரை அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், 40 சதவீத இடம் நீக்கப்படும். விவசாயிகள் எங்கு கான்கிரீட் வேண்டாம் என்கிறார்களோ, அங்கு கான்கிரீட் போடப்படாது' என்றார்.
இந்நிலையில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, பொன்னையன், சண்முகராஜ், முத்துசாமி, அரச்சலுார் செல்வம் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கூறியதாவது:
ஒரு தரப்பு விவசாயிகளை மட்டும் அமைச்சர் முத்துசாமி அழைத்து பேசினார். அதில் பாசனதாரர்கள், பாசனதாரர் அல்லாதோரும் உள்ளனர். நவீனமாக சீரமைத்து, தேவையான இடங்களை ஏற்கனவே திட்டமிட்டு கான்கிரீட் கரை, தளம் போடும் பணியை, பல இடங்களில் நீக்குவதாக அமைச்சர் அறிவிப்பது பாரபட்சமான நடவடிக்கையாகும். பாசனத்துக்கான கீழ்பவானி வாய்க்காலை, தற்போது குடிநீருக்கான வாய்க்கால் என்பதுபோலவும், கசிவு நீர் மூலம் பாசனம் பொறுவோரை ஆதரித்து, ஆயக்கட்டுதாரர்களை அமைச்சர் புறக்கணிப்பது வேதனையாகிறது.
கெயில் திட்டத்துக்காக, விவசாய நிலங்களில் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். அரசின் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பொதுப்பணித்துறை நிலத்தில் பணி செய்வதை, அமைச்சர் வேண்டாம் என தடுப்பது நியாயம் இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE