ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலை வேளையில் பரவலாக மழை பெய்ததால், அக்னி நட்சத்திர சுவடு அடியோடு மாயமானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, பகலில் வெயில் வாட்டினாலும், மாலையில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழையும் பெய்து வருகிறது. பத்து நாட்களாக இதே நிலை தொடர்வதால், இரவில் குளிர் வந்து இதமாக்குகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் வெயிலும் இன்றி, மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல் மாநகரில் சாரல், துாறல் மழை என மாறி, மாறி பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. அதேசமயம் வழக்கான பலத்த காற்று, இடி-மின்னல் இல்லை. இதனால் நேற்று முழுவதும் அறவே, அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லாமல், குளிர் காலம் போல் கால நிலை மாறியது.
* அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் காலை முதல் இரவு வரை, விட்டு விட்டு மழை
பெய்தது.
* கோபியில் காலை முதல், வானம் மேக மூட்டமாக இருந்தது. மாலை, 4:00 மணிக்கு சாரல் மழை பெய்ய துவங்கியது. கோபி, புதுப்பாளையம், பாரியூர், மொடச்சூர், கரட்டூர், கச்சேரிமேடு, ல.கள்ளிப்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில், இரவிலும் சாரல் மழை தொடர்ந்தது.
* பெருந்துறையில், மாலை, 4:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, இரவிலும் நீடித்தது.
* சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி பகுதிகளில் காலை முதலே கடும் மேகமூட்டமாக இருந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை தொடர்ந்தது. இதனால் விவசாய பணி பாதிக்கப்பட்டது. சாலைகளில் மக்களின் நடமாட்டமும்
குறைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE