காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டும், இன்று வரை பேருந்து நிலையம் அமைக்க இறுதி முடிவு எட்டாமல் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியும், தி.மு.க., ஆட்சியும் மாறி மாறி அரசாணை வெளியிட்ட போதும், இடம் கிடைக்காமல் திட்டம் இழுத்தடிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில், 51 ஆயிரம் குடியிருப்புகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகராட்சியின் தற்போதைய பரப்பளவான, 64 சதுர கி.மீ., நாளடைவில், 100 சதுர கீ.மீ., என விரிவடைய உள்ளது. மக்கள் தொகை அதிகம் என்பதாலும், இட நெருக்கடி போன்ற காரணங்களால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து வேலுார் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காஞ்சிபுரம் நகருக்குள் வர முடியவில்லை. புறநகரில் பேருந்து நிலையம் அமைந்தால், நெடுஞ்சாலையில் செல்லும் தொலைதுார பேருந்துகள் அனைத்தும் காஞ்சிபுரத்தில் நின்று செல்லும்.இதன் காரணமாகவே, புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கீழ்கதிர்பூர் கிராமத்தில், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எதிர்ப்புபேருந்து நிலையத்திற்கு அ.தி.மு.க., அரசு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 2018ல் அரசாணையும் வெளியிட்டது.
ஆனால், அந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மேலும், பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கீழ்கதிர்பூர் விவசாயிகள், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,எழிலரசன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., எழிலரசனும் கீழ்கதிர்பூரில் பேருந்து நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு, அதே 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மீண்டும் புதிய அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. கீழ்கதிர்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைவதற்கு, எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடம் தேடி வருகிறார். இதனால் மாவட்ட நிர்வாகமும், கீழ்கதிர்பூரில் பேருந்து நிலையம் அமைக்கும் முடிவை மாற்றிக் கொண்டனர்.
தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இடங்களில், பேருந்து நிலையம் அமைக்க, வருவாய் துறை அதிகாரிகள் இடம் பார்த்து வருகின்றனர். ஆனால், ஒரு இடம் கூட அமையவில்லை. மொத்தமாக, 10 முதல் 15 ஏக்கர் நிலம், நெடுஞ்சாலை அருகிலேயே வேண்டும் என்பதால், இன்று வரை பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வாகாமல், இழுத்தடிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றம்
புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, 2018ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாகியும், இன்று வரை உறுதியான இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை. ஆட்சி மாற்றமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கீழ்கதிர்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் கொண்டு வரும் முடிவு இப்போதைக்கு இல்லை. தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் சித்தேரிமேடு பகுதியில் உள்ளது. அந்த அறக்கட்டளை இடத்தை கேட்டு வருவாய் துறை உயரதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனால், அந்த இடத்தை வருவாய் துறை அளிக்கும் மாற்று இடத்திற்கோ, இனமாகவோ வழங்க மாட்டோம். விலைக்கு மட்டும் தான் கொடுப்போம் என அறக்கட்டளை நிர்வாகிகள் கூறி விட்டனர்.
இதனால் பொன்னேரிக்கரையில் உள்ள மற்றொரு கல்வி அறக்கட்டளையின் இடம் நெடுஞ்சாலையோரம் உள்ளது. அந்த இடத்தை கேட்க வருவாய் துறையினர் முடிவு செய்துள்ளனர். அந்த இடத்தை பேருந்து நிலையத்திற்கு பெற்று, அவர்களுக்கு மாற்று இடத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் உயரதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE