சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தலைவர்கள் தான் ஓட்டம் பிடிப்பர்!

Added : மே 13, 2022 | கருத்துகள் (2)
Advertisement
தலைவர்கள் தான் ஓட்டம் பிடிப்பர்! ஆர்.மூர்த்தி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இலங்கையில் நடப்பது, நமக்கு எச்சரிக்கை மணியாகும். நம் நாட்டில், 2014 முதல் மத மோதல்கள் அதிகரித்து உள்ளன. இவை, சமூக ஒற்றுமையை குலைத்து, பொருளாதார பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும்' என்று அங்கலாய்த்து இருக்கிறார் ஜம்மு- - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி


தலைவர்கள் தான் ஓட்டம் பிடிப்பர்!

ஆர்.மூர்த்தி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இலங்கையில் நடப்பது, நமக்கு எச்சரிக்கை மணியாகும். நம் நாட்டில், 2014 முதல் மத மோதல்கள் அதிகரித்து உள்ளன. இவை, சமூக ஒற்றுமையை குலைத்து, பொருளாதார பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும்' என்று அங்கலாய்த்து இருக்கிறார் ஜம்மு- - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவியுமான மெஹபூபா முப்தி. இவர் குறிப்பிடும், ௨௦௧௪ல் தான், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்தது.
மெஹபூபா முப்தி அவர்களே... 2014ல் இருந்து நம் நாட்டில் எத்தனை இடங்களில், எந்தெந்த மாநிலங்களில் மத மோதல்கள் நிகழ்ந்தன; எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதற்கான பட்டியல் தர முடியுமா?
இங்குள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை தவிர, உலகில் உள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும், பிரதமர் மோடியை போற்றி புகழ்கின்றன. பகவத் கீதையை அரபு மொழியில் மொழிபெயர்த்து, அவர்கள் படித்து பூரிப்பு அடைகின்றனர்.
இப்படி உலகமே, பிரதமர் மோடியின் நிர்வாக திறமை கண்டு பிரமித்துக் கொண்டிருக்க, 'அதிகரித்துள்ள மத மோதல்களால், சமூக ஒற்றுமை குலைந்து, பொருளாதார பாதுகாப்பின்மை ஏற்படும்' என, 'கயிறு' திரித்துக் கொண்டிருக்கிறீர்களே... இது நியாயமா!
அதேபோல, தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்க முடியாமல், இரவல் கால்களை கட்டிக் கொண்டு நடக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இலங்கை வன்முறை சம்பவங்களை மேற்கோள் காட்டி, 'இந்தியாவிலும் அது போன்ற வன்முறைகள் நிகழும்' என்று ஆரூடம் கூறி வருகின்றனர். இப்
படிப்பட்டவர்களின் தேசப்பற்றை என்னவென்று சொல்வது?இந்தியாவும்,- இலங்கையும் ஒன்றல்ல. இலங்கையில் இன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற வன்முறைகளும், கலவரங்களும் இந்தியாவில் நிகழ வாய்ப்பே இல்லை.
ஒருவேளை அப்படியொன்று நிகழுமேயானால், அப்போது, ஊழலின் உறைவிடமாக, பிலிப்பைன்சில் இருந்த மார்க்கோஸ், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, கட்டிய கவுனோடு தப்பிப் பிழைத்து ஓடியது மாதிரி, இங்குள்ள அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தான் ஓட வேண்டியிருக்குமே அன்றி, சாதாரண குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல!

தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஹிந்து மதத்திற்கு எதிரானவர் போலவும், மற்ற மதங்களை மட்டுமே ஆதரிப்பவர் போலவும், சிலர் புலம்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, நான் சொல்வதாவது:
ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஹிந்து. அவரின் கல்விச் சான்று முதல் அனைத்திலும், ஹிந்து என்று தான் இருக்குமே தவிர, வேறு மதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்காது. ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்றால், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதை தடுத்திருக்க மாட்டாரா?
ஸ்டாலினும், தன் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் சாமி கும்பிடக்கூடாது என தடை போடவில்லையே. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைத்துள்ளனரே... அதை தடுத்தாரா? அவரது அமைச்சரவையில், ஹிந்து அறநிலையத் துறை தானே சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறது. ஓராண்டில் எத்தனையோ கோவில்கள் புனரமைக்கப்பட்டு இருப்பதுடன், கும்பாபிஷேகமும் நடந்துள்ளதே. இதெல்லாம் ஸ்டாலின் ஆலோசனைப்படிதானே நடக்கிறது.
அவர் முதல்வரானவுடன், திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பட்டர்கள் வந்து மரியாதை செய்தனரே, அதை அவர் மறுக்காமல் ஏற்றுக் கொண்டாரே... முதல்வரின் மகன் உதயநிதி, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தாரே; முதல்வர் நினைத்தால், அதை தடுத்திருக்கலாமே...
செய்யவில்லையே!ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் முதல்வர் வாழ்த்து கூறுகிறார்; ஹிந்து பண்டிகைகளுக்கு கூறுவதில்லை என்று குறை கூறுபவர்கள், அவர் திடீரென தீபாவளிக்கு வாழ்த்து கூறினால், ஓட்டுக்காக தன் கொள்கையிலிருந்து மாறி விட்டார்; தடம் புரண்டு விட்டார் என்று மாற்றியும் பேசுவர்.
மொத்தத்தில், ஸ்டாலின் எந்த ஒரு சூழ்நிலையிலும், ஹிந்து மதத்திற்கு எதிராக இருந்ததில்லை. அவரை ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்று கூறி, நம்மிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்.

காமராஜர் பெயரை உச்சரிக்காதீங்க!

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை தருவோம்' என, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் சொல்லி வருகின்றனர். ஆனாலும், அவர்களால் இங்கு ஆட்சியை பிடிக்கவும் முடியவில்லை; காமராஜர் ஆட்சியை தரவும் முடியவில்லை.
அதனால் இப்போது, 'முதல்வர் ஸ்டாலின் வாயிலாக, காமராஜர் ஆட்சியை தருவோம்' என்று பேசத் துவங்கியுள்ளனர். 'முதல்வரே... காமராஜர் ஆட்சியை தாருங்கள்' என, அவரிடம் கெஞ்சவும் ஆரம்பித்துள்ளனர்.
காமராஜரை எப்படி எல்லாம் வசைபாடி, அவரிடமிருந்து தி.மு.க.,வினர் ஆட்சியை பறித்தனர் என்பது, தமிழகத்தில் உள்ள காங்., தலைவர்களுக்கு தெரியாதா என்ன? இருந்தும் அதை எல்லாம் மறந்து விட்டு, தேர்தல் நேரத்தில் தி.மு.க., போடும், 'சீட்'
பிச்சைக்காக அவர்களிடம் மன்றாடுகின்றனர். தங்களது கட்சியை சீரழித்த, நேர்மையான தங்கள் தலைவனை கொடுமையான வார்த்தைகளால் அன்று அர்ச்சித்த தி.மு.க.,வுடன், சூடு சொரணை இருந்திருந்தால், காங்கிரஸ் நட்புறவே கொண்டிருக்கக் கூடாது. ஆனாலும், சுயநலமிக்க, பதவி ஆசை பிடித்த தலைவர்களால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி நீடிக்கிறது.
பதவி சுகத்துக்காக, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, காங்கிரசார் அரசியல் செய்வதை, காமராஜர் பாணியில் சொன்னால் சாக்கடை. அந்தச் சாக்கடையில் இருந்து கொண்டு, காமராஜர் என்ற சந்தனத்தை பூசினால் மணக்கவா செய்யும்... மொத்தமும் நாறும்.
காமராஜரின் மதிப்பு, மரியாதையை காக்க திராணி இல்லாத தமிழக காங்., தலைவர்கள், அவரின் அப்பழுக்கற்ற வாழ்க்கை பற்றி அறிந்திருந்தும், தி.மு.க.,விடம் அவரது ஆட்சியை எதிர்பார்க்கலாமா?
அரசியலில் கால் காசு சம்பாதிக்காமல், மக்களிடையே கோடியில் ஒருவராய், சாதாரண மனிதராக இருந்த காமராஜர் எங்கே; பல தலைமுறைக்கு கோடி கோடியாக குவித்த தி.மு.க.,வினர் எங்கே? அவர்களாவது... காமராஜர் ஆட்சியை
தருவதாவது...!எடுத்ததற்கு எல்லாம் ஆளும் கட்சிக்கு துதி பாடும் மற்றும், 'ஜால்ரா' போடும் தமிழக காங்கிரஸ் கட்சியினர், இனி காமராஜர் பெயரை உச்சரிக்காமல் இருப்பதே, அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மே-202215:31:17 IST Report Abuse
D.Ambujavalli காங்கிரஸ் மட்டுமில்லை, இனி எந்தக்கட்சியுமே காமராஜர், கக்கன், ஜீவா என்ற பெயர்களை உச்சரித்து அவற்றை அசிங்கப்படுத்தாதீர்கள் அவற்றை உச்சரிக்கும் தொகுதியை நீங்கள் இழந்து இரண்டு தலைமுறை ஆகிவிட்டது
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
14-மே-202211:25:37 IST Report Abuse
raja ஸ்டாலின் எந்த ஒரு சூழ்நிலையிலும், ஹிந்து மதத்திற்கு எதிராக இருந்ததில்லை. அவரை ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்று கூறி, நம்மிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்.சரி உடன் பிறப்பே.... திருட்டு திராவிட ஓங்கோல் தெலுங்கர்களை தமிழர்களிடம் இருந்து பிரித்து விடலாம்.....ஏனெனில் தமிழன் திராவிடன் இல்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X