மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சியில் போதி அளவு குடிநீர் இருந்தாலும், உவர்ப்பு தன்மையாக இருப்பதால், டிராக்டர்களிலும், கேன்களில் அடைத்து விற்கப்படும்
குடிநீரையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். புழல் ஏரியில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் 7,552 வீடுகள் மற்றும் கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்கிறது.
வங்க கடல் பகுதியை ஒட்டி இருப்பதால், மீஞ்சூர் பகுதி முழுதும் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியுள்ளது.இதனால் 8 கி.மீ., தொலைவில் உள்ள, வன்னிப்பாக்கம், ராமரெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது.இதற்காக, 32 ஆழ்துளை மோட்டார்கள் பொருத்தப் பட்டு, தினமும், 25.30 லட்சம் லிட்டர் குடிநீர், மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆற்றில் தண்ணீர் இருக்கும் காலங்களில், மேற்கண்ட ஆழ்துளை மோட்டார்களில் இருந்து கிடைக்கும் தண்ணீர், குடிநீருக்கும், சமைக்கவும் பயன்படுத்தலாம். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டும் தான் இந்த நிலை.கோடை காலம் துவங்கினால் தண்ணீர் உவர்ப்பாகிவிடும். குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியாமல், மக்கள் தவிப்பிற்கு ஆளாவர். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாக உள்ளது.தற்போது கோடை காலம் என்பதால், தண்ணீரின் உவர்ப்பால் பயன்படுத்தாமல், புழல், சிறுவாக்கம் பகுதிகளில் இருந்து தனிநபர்கள், டிராக்டர் மற்றும் லாரிகளில் எடுத்து வரும் குடிநீரை ஒரு குடம், ஐந்து ரூபாய் என, விலை கொடுத்து வாங்குகின்றனர்.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என விற்பனை செய்யப்படும் கேன் குடிநீரை, 35 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். குடும்பத்தின் தேவையை பொருத்து, தினமும், ஒன்று அல்லது இரு கேன் வாங்குகின்றனர்.மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், காலை நேரங்களில், தண்ணீர் ஏற்றி வரும் டிராக்டர்கள், லாரிகள், கேன் தண்ணீர் எடுத்து வரும் வாகனங்கள் என, குடியிருப்பு பகுதிகளை சுற்றிச்சுற்றி வலம் வருகின்றன.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து அல்லது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக மீஞ்சூர் பகுதிக்கும் சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு
மழைக்காலத்தில் குடிப்பதற்கு உகந்ததாகத் தான் குடிநீர் இருக்கிறது. கோடை காலத்தில் தான் சிறிதளவு உவர்ப்புதன்மை இருக்கிறது. மீஞ்சூர் பேரூராட்சியில் 99 சதவீதம் பேர், நிர்வாகம் வழங்கும் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்காக கேன் வாட்டர், டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை வாங்குகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தின் புழல் ஏரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம். திட்ட அறிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காணப்படும்.
பெயர் வெளியிடாத பேரூராட்சி அதிகாரி ஒருவர், மீஞ்சூர்
நிரந்தர தீர்வு காண வேண்டும்
மீஞ்சூரில் குடிநீர் பற்றாக்குறை குறித்து, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:கடல் நீர் உட்புகுவது அதிகரித்து உள்ளதால்,நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள், பணம் கொடுத்தே குடிநீர் வாங்கி பருகும் நிலையில்தான் உள்ளனர். இதனால், தங்களது அன்றாட செலவினங்களில், குடிதண்ணீருக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், புழல் ஏரியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தற்போது அமைந்துள்ள மீஞ்சூர்- - வண்டலுார் சாலை ஓரம், குழாய்கள் பதித்து எளிதாக இந்த திட்டத்தினை செயல்படுத்தி, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும். நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னையால் தவித்து வரும் மீஞ்சூர் பகுதி மக்களுக்கு, நிரந்தர தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மீஞ்சூர் பேரூராட்சி ஒரு பார்வை
வார்டுகள் : 18
தெருக்கள் : 802
மக்கள் தொகை : 32,637
மேல்நிலை தொட்டிகள் : 10
கொள்ளளவு : 22 லட்சம் லிட்டர்
நாள் ஒன்றுக்கு குடிநீர் தேவை : 23.80 லட்சம் லிட்டர்
நாள் ஒன்றுக்கு குடிநீர் வினியோகம் : 25.30 லட்சம் லிட்டர்
நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு குடிநீர் வினியோகம் : 78 லிட்டர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE