கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது, பில்லாக்குப்பம் கிராமம். பூவலம்பேடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கீழ் உள்ள இந்த கிராமத்திற்கு, குருவராஜகண்டிகை கிராமம் வழியாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இடையில், அடர்ந்த தைலந்தோப்பு இருப்பதால் மழை பெய்தாலும், காற்று அடித்தாலும் மின் துண்டிப்பு ஏற்படுவது வழக்கம்.இரவு நேரத்தில், அந்த மின் பாதையில் ஏற்படும் பிரச்னையை கண்டறிந்து சீரமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.அதனால் மழை காலங்களில், பல மணி நேர தொடர் மின் வெட்டால் பில்லாக்குப்பம் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் விதமாக, சிறுபுழல்பேட்டையில் இருந்து பில்லாக்குப்பத்திற்கு, 2018ல் உயர் அழுத்த மின் பாதை ஏற்படுத்தப்பட்டது.இணைப்பு கொடுக்க வேண்டிய நேரத்தில், இடையில் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், உயர் அழுத்த மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. அதன்பின், அந்த திட்டத்தை மின் துறையினர் கிடப்பில் போட்டனர்.
மக்களின் நலன் கருதி, உடனடியாக அந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என, பில்லாக்குப்பம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE