திருத்தணி:திருத்தணி பகுதியில் வாகன விபத்துகளை தடுப்பதற்காக, இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் தேநீர் வழங்கி உற்சாகப்படுத்தி வழி அனுப்புகின்றனர்.
விபத்துகளை தடுக்க போலீசார் எடுத்துள்ள இந்த முயற்சியால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர், திருத்தணி, நகரி, புத்துார் வழியாக திருப்பதிக்கு, 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக செல்வதாலும், துாக்க கலக்கத்தில் வாகனங்களை இயக்குவதாலும், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.இப்பகுதியில் ஒரு மாதத்திற்கு 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளில் சிக்கி, இருவர் முதல் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர். மேலும் பலர், பலத்த காயமடைகின்றனர்.
குறிப்பாக, திருத்தணி எல்லையில் இருந்து தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடி வரை, தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன.இதை தடுக்கும் வகையில், திருவள்ளூர்எஸ்.பி., வருண்குமார், நள்ளிரவு முதல் அதிகாலை வரை, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உற்சாகப்படுத்தவும், போலீசார் சார்பில் இலவசமாக தேநீர் வழங்கவும் அறிவுறுத்தினார்.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பரணீத் தலைமையில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், திருத்தணி - நாகலாபுரம் கூட்டுச்சாலையில், வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கினர்.சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.இதனால் உற்சாகத்துடனும், விழிப்புடனும் வாகனங்களை ஓட்ட ஏதுவாக இருப்பதால், போலீசாரின் செயலுக்கு, வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்து செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE