பழவேற்காடு:பழவேற்காடில் நேற்று காலை, திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டதால், பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பழவேற்காடு மீனவ பகுதி, வங்க கடலை ஒட்டியுள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.நேற்று காலை 7:00மணிக்கு, பழவேற்காடு பகுதியில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. அந்த அதிர்வில் வீடுகள், ஜன்னல் கதவுகள் ஆடியதால் மீனவ மக்களிடையே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பழவேற்காடு கடற்பகுதியை ஒட்டியுள்ள, ஆந்திர மாநிலம் ஸ்ரீஅரிகோட்டாவில் சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில், 'ககன்யான்' திட்டத்திற்கான ஸ்டேடிக் மோட்டாரை இயக்கி ஆய்வு மேற்கொண்டதால், இந்த அதிர்வு ஏற்பட்டது தெரிந்தது.தொடர்ந்து, வருவாய் துறையினர் பழவேற்காடு பகுதி மீனவ மக்களிடம் மேற்கண்ட சோதனை குறித்து எடுத்துக்கூறி, 'யாரும் அச்சப்பட வேண்டாம்' என தெரிவித்தனர்.
வழக்கமாக, ராக்கெட்டு ஏவுவது, சோதனை செய்வது போன்ற சமயங்களில் பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும்.தற்போது எந்தவித தகவலும் இல்லாமல் இது போன்ற சோதனை நடந்திருப்பதால் 'பூகம்பம் ஏற்பட்டுவிட்டதோ' என அச்சப்பட்டதாக, மீனவ மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE