பொள்ளாச்சி;'பொள்ளாச்சி நகராட்சி சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,' என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் கமிஷனர் தாணுமூர்த்தியிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சியில், 1996ம் ஆண்டு அப்போதைய நகராட்சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்ட பொது வரி சீராய்வில், உச்சபட்சமாக, 300 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டது.
இதனால், பொதுமக்கள், சிறு மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள் வரிச்சுமையால் அவதிப்படுகின்றனர். பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள், இடம் பெயர்ந்து சென்றன. மீண்டும் சொத்துவரி, 150 சதவீதம் ஏற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு, 1996ம் ஆண்டு, 200 - 300 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டது. அதே சமயத்தில் மற்ற நகராட்சிகளும், மாநகராட்சிகளிலும் ஏற்றப்பட்ட சொத்து வரி, 10 - 25 சதவீதம் வரைக்கும் மட்டுமே இருந்தது.
ஏற்கனவே, வரி சீராய்வின் போது, 30 ஆண்டுகளின் சொத்து வரி, பொள்ளாச்சி நகராட்சியால் உயர்த்தப்பட்ட போதும்; சிறு வியாபாரம், டீக்கடை, மெஸ்கள் ஆகிய வியாபார நிறுவன உரிமையாளர்கள், சொந்த மற்றும் வாடகை கட்டடத்தில், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து தொழில் செய்து வருகிறோம். வரி உயர்வால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மீண்டும் அதிகப்படி வரி உயர்த்தினால், கட்டட உரிமையாளர்கள் மாத வாடகையை ஏற்றுவதோடு இல்லாமல், சொந்த கட்டடத்தில் தொழில் செய்து வருபவர்களும், வரி செலுத்த முடியாமலும், தங்களது வாழ்வாதாரமும் முற்றிலும் தடைபடும்.
உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 20 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவர். 1996ல் ஏற்றப்பட்ட, சொத்து வரி பாதிப்பே இன்றும் தொடர்கிறது.பொள்ளாச்சி மக்களின் நலன் கருதியும், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காக்க, பொருளாதார மேம்பாடு கருதி, சொத்து வரி உயர்வை கைவிடவோ அல்லது, 25 சதவீதத்துக்குள் உயர்வு இருக்குமாறு அமைக்க வேண்டும்.மற்ற நகராட்சிகளின் நடைமுறையில் உள்ள வரி உயர்வை ஒப்பிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE