மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புகளில், போக்குவரத்தை எளிதாக்கி விபத்தை தவிர்க்க, இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலை சுற்றுலா இடமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்களை உள்நாடு, சர்வதேச சுற்றுலாப் பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், இவ்வூர் அதிகம் அறியப்படாத நிலையில், மிக குறைவான பயணியர், சுற்றுலா வந்தனர். அப்போது, கிழக்கு கடற்கரை சாலை, குறுகிய ஒரு வழித்தடமாக இருந்தது.நாளடைவில், மத்திய- மாநில அரசுகள் சுற்றுலாவை மேம்படுத்தின. சுற்றுலாப் பயணியர் படிப்படியாக அதிகரித்தனர்.சென்னை - மாமல்லபுரம் இடையே, முட்டுக்காடு படகு குழாம், முதலைப் பண்ணை, தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் என உருவாகி, சுற்றுலா மேலும் வளர்ச்சி பெற்றது. பீச் ரிசார்ட் விடுதிகள் அதிகரித்தன.
சென்னை - மாமல்லபுரம் இடையே மட்டுமே, வாகன போக்குவரத்து இருந்தது. மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, குக்கிராமங்களே இருந்தன. சென்னை - புதுச்சேரி இடையே, ஒரு நாளில், நான்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.கடலோர போக்குவரத்து கருதி, 1998ல், சென்னை - புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்டது.வாகன போக்குவரத்தும் அதிகரித்தது. பின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை - மாமல்லபுரம் பகுதியை, நான்கு வழித்தடமாக, சில ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தியது. இத்தடத்தில், சுற்றுலா, தொலைதுார வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது.
இச்சூழலில், மாமல்லபுரம் - புதுச்சேரி, 95 கி.மீ., பகுதியை, மத்திய அரசு, என்.எச்., 332ஏ தேசிய நெடுஞ்சாலை என, 2018 ல் அறிவித்தது. இத்தடத்தில், மாமல்லபுரம் - முகையூர்; முகையூர் - மரக்காணம்; புதுச்சேரி வரை, நான்குவழிப் பாதையாக மேம்படுத்த உள்ளது. முதற்கட்ட மேம்பாட்டிற்கு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கென 1,200 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை துறை நிதி ஒதுக்கியுள்ளது.இத்தடத்தில், மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதி சந்திப்புகளில், போக்குவரத்து இடையூறு சிக்கலாக உள்ளதால், இதை தவிர்க்க, மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.மாமல்லபுரம் பகுதி புறவழிப் பாதை சந்திப்பில், நகருக்குள் செல்லும் உட்புற சாலை இணைகிறது.
பூஞ்சேரி பகுதி சந்திப்பில், பழைய மாமல்லபுரம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை என இணைகின்றன.இச்சந்திப்புகளில், வாகனங்கள், தொடர்ந்து குறுக்கில் கடக்கின்றன. ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிகளை புறக்கணித்து, தாறுமாறாக ஓட்டி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது; உயிரிழப்பு அதிகரிக்கிறது.
எனவே, மாமல்லபுரம் - புதுச்சேரி, தேசிய நெடுஞ்சாலை, மாமல்லபுரம் புறவழி சந்திப்பிலிருந்து துவங்கும் நிலையில், இரு மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.மாமல்லபுரம் சந்திப்பில், 1,300 மீ., நீளம், பூஞ்சேரி சந்திப்பில், 1,000 மீ., நீளம் என அமைய உள்ளது. பூஞ்சேரி சந்திப்பு பாலம், சென்னை கத்திபாரா பாலம் வடிவில் அமையும் என தெரிகிறது. பாலம் அமைவிட பகுதியில், ஒப்பந்த நிறுவனத்தினர், தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE