ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் இதர தற்காலிக பணியாளர்களுக்கு, சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதால், கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.தமிழக வனத்துறையில் தற்காலிக பணியில், 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள், மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு காவலர்கள் என இதர பணிகளில், 2,500 பேர் உள்ளனர்.
இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் கோட்டங்களில், 125 வேட்டைத்தடுப்பு காவலர்கள்; சுற்றுச்சூழல் காவலர்கள், மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு காவலர்கள், 92 பேர் என மொத்தம், 217 பேர் உள்ளனர்.இவர்களுக்கு வழக்கமாக மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்தன. தற்போது, 10 - 15ம் தேதியில் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்கத்தினர், அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்தில் முன்பு, புலிகள் காப்பக அறக்கட்டளை சார்பில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
மாதந்தோறும், அதிகபட்சமாக, 5ம் தேதிக்குள் தாமதமின்றி ஊதியம் வழங்கப்பட்டன.தற்போது, அறக்கட்டளையில் இருந்து சம்பளத்துக்கான நிதி, சூழல் மேம்பாட்டுக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், மாதந்தோறும் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில், 20ம் தேதிக்கு பின், சம்பளம் கிடைக்கிறது. இதனால், கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு மாதம், 12,500 ரூபாயும், இதர பணியாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. நடப்பு பொருளாதார சூழலில், இந்த சம்பளத்தை கொண்டு குடும்பத்தை நகர்த்துவதே சிரமமாக உள்ளது. சம்பளத்தை உயர்த்தி, தாமதமின்றி வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE