காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றம்... அவசியம்!உதய்பூர் கூட்டத்தில் சோனியா பேச்சு | Dinamalar

காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றம்... அவசியம்!உதய்பூர் கூட்டத்தில் சோனியா பேச்சு

Updated : மே 14, 2022 | Added : மே 13, 2022 | |
உதய்பூர்:''காங்கிரஸ் கட்சியின் அமைப்பில் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம். நாம் பணிபுரியும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட விருப்பங்களை விட, கட்சியின் நலனே முக்கியம் என கருதி பணியாற்ற வேண்டும்,'' என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார்.காங்கிரஸ் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
 காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றம்... அவசியம்!உதய்பூர் கூட்டத்தில் சோனியா பேச்சு

உதய்பூர்:''காங்கிரஸ் கட்சியின் அமைப்பில் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம். நாம் பணிபுரியும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட விருப்பங்களை விட, கட்சியின் நலனே முக்கியம் என கருதி பணியாற்ற வேண்டும்,'' என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார்.
காங்கிரஸ் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் அடைந்த படுதோல்வி, அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.


வலியுறுத்தல்

கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்கவும், கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி மூத்த தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதைஅடுத்து, கட்சியில் எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்க, கட்சியின் சிந்தனையாளர் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் சிந்தனையாளர் கூட்டம், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று துவங்கியது. கூட்டத்தை துவக்கி வைத்து சோனியா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அமைப்பில், உடனடியாக மாற்றம் தேவைப்படுகிறது. நாம் பணிபுரியும் முறையையும் மாற்ற வேண்டும்.

இக்கூட்டத்தில், கட்சியினர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், கட்சியின் வலிமை மற்றும் ஒற்றுமை குறித்த செய்தி தான், நாடு முழுதும் செல்ல வேண்டும். கருத்து வேறுபாடுநம் தனிப்பட்ட விருப்பங்களை விட, கட்சியின் நலனே முக்கியமானதாக கருத வேண்டும். கட்சி ஏராளமானவற்றை நமக்கு செய்துள்ளது. தற்போது, கட்சிக்கு நாம் திருப்பித் தர வேண்டிய நேரம் இது.

நாம் முன் எப்போதும் இல்லாத கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சியை வலுப்படுத்துவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டாக வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. இங்கு, சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றியமைக்க முழு மூச்சுடன் முயற்சி நடக்கிறது. சிறுபான்மையினர், நம் நாட்டின் அங்கம். அவர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இதன் வழியாக நாட்டையும், மக்களையும் எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க, மோடி அரசு முயற்சிக்கிறது.


விசாரணை

மஹாத்மா காந்தியை கொன்றவர்களை பெருமைப்படுத்தி, ஜவஹர்லால் நேரு செய்த பணிகளை வரலாற்றில் இருந்து அழிக்கவும் நினைக்கின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, நாட்டின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும், மோடி அரசு சீரழிக்கிறது. ஜனநாயகத்துக்கு ஆதரவாக, அரசுக்கு எதிராக குரல் கொடுப்போரை, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்துகின்றனர்.இவ்வாறு சோனியா பேசினார்.
கூட்டத்தில், 430க்கும் அதிகமான கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நாளை நடக்கும் கடைசி நாள் கூட்டத்தில், கட்சியின் எம்.பி., ராகுல் நிறைவு உரையாற்றுகிறார். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க, உதய்பூருக்கு சோனியா விமானத்தில் வந்தார். ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் ரயிலில் வந்தனர்.


ஒரு குடும்பத்துக்கு ஒரு வாய்ப்பு


சிந்தனையாளர் கூட்டம் துவங்குவதற்கு முன், காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மாகன் நிருபர்களிடம் கூறியதாவது:காங்கிரசில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி தான், சிந்தனையாளர் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். தேர்தல்களில் போட்டியிட, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் கொள்கையை அமல்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும். ஒரு குடும்பத்தில் கூடுதல் நபர்கள் போட்டியிட விரும்பினால், அவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தீவிரமாக கட்சி பணியாற்றிஇருக்க வேண்டும். நேரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு என்ற கொள்கையிலிருந்து, அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தேர்தல்களில் போட்டியிட, 50 வயதுக்குட்பட்டோருக்கு அதிக வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X