பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வடக்கிபாளையம் அருகே நெடுஞ்சாலை சீரமைப்பு திட்டத்தை முறையாக மேற்கொள்ளாததால், மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், நடுப்புணி ரோடு சந்திக்கும் வடக்கிபாளையம் பிரிவில், விபத்து தடுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.
இப்பகுதியில், 'சென்டர் மீடியன்' மற்றும் சதுக்கம் அமைத்து, போக்குவரத்து பிரித்து விடப்பட்டது. திட்டப்பணியில், முறையான திட்டமிடல் இல்லை, தரம் இல்லை, விபத்து அபாயம் உள்ளது என, பல்வேறு புகார்கள் பணி நடந்த போதே எழுந்தது. ஆனால், பொதுமக்களின் கருத்துகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள், பணியை செய்து தங்கள் 'கடமையை' முடித்துச் சென்றனர்.
இந்நிலையில், நடுப்புணி ரோடு, கோவை ரோட்டில் சந்திக்கும் இடத்தில், சிறிய மழைக்கு கூட தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விபத்து அபாயம் நிலவுகிறது. இதை, ஒரு ஆண்டுக்கும் மேலாக சரி செய்யாமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.அதே போல், நடுப்புணி ரோட்டில் ஆர்.பொன்னாபுரம் பிரிவு அருகே, மழைநீர் பாதி ரோட்டை ஆக்கிரமித்து குளம் போல தேங்கி விடுகிறது. இதனால், மழைநீருக்குள் செல்வதை தவிர்க்க விரும்பும் வாகன ஓட்டுனர்கள், விபத்துக்கு உள்ளாகின்றனர்.வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்புக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து, தாங்கள் செய்த பணியில் ஏற்பட்ட சொதப்பல்களை சீரமைக்க வேண்டியது கட்டாயம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE