மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சுற்றுலா வளர்ச்சிக் கழக மரகத பூங்கா, பயணியருக்கு பயனின்றி வீணடிக்கப்படுகிறது.
மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலா இடம். இங்குள்ள பல்லவர் கால தொல்லியல் கலைச்சின்னங்களை, சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர். வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில் குவிகின்றனர். இங்கு கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், வெவ்வேறு இடங்களில் உள்ளன.பாதசாரி பயணியர், சிற்ப பகுதிகளுக்கு, 3 கி.மீ., தொலைவு நடந்தே செல்கின்றனர்.
அவர்கள் களைப்படைந்தால், இளைப்பாறி ஓய்வெடுக்க வசதியின்றி பரிதவிக்கின்றனர். இது குறித்து, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடபட்டது.அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தொல்லியல் துறை அலுவலகம் அருகில், கடந்த 2009ல், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், மரகத பூங்கா அமைத்தது.இப்பூங்கா, கலைநிகழ்ச்சி நடத்துவதற்கான மேடை, பார்வையாளர் மாடம், பயணியர் இளைப்பாறும் இடம், பசுமை புல்வெளி, நடைபாதை, மின்விளக்கு ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் பராமரித்து, நாளடைவில் முட்புதர் சூழ்ந்து சீரழிந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, 2018ல் புதர் அகற்றி, வார இறுதி கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி நேரத்தில் மட்டுமே பயணியரை அனுமதித்து, மற்ற நேரம் மூடப்பட்டது.பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2019ல் இங்கு சந்தித்ததை முன்னிட்டு, பேரூராட்சி நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மலர்ச் செடிகள், சிறிய மரங்கள் வளர்த்து, புதிய மின்விளக்குகள் அமைத்து மேம்படுத்தியது.
மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி, பேரூராட்சி நிர்வாகமே, தொடர்ந்து பராமரித்தது. இதன் பராமரிப்பு செலவு கருதி, ஓராண்டிற்கு முன், இந்நிர்வாகம் பராமரிப்பை கைவிட்டது. இதையடுத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து பராமரிக்கிறது. ஆனால், சுற்றுலா பயன்பாடு இன்றி, நிரந்தரமாக மூடியுள்ளது.பராமரிப்பு செலவு கருதி, நாளடைவில் பராமரிக்காமல், மீண்டும் சீரழியும். இதை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து, சுற்றுலாவிற்கு பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement