பொதுஇடங்களில் யாருக்கும் பொறுப்பில்லை... காற்றில் கலக்குது 'புகை'சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளும் தயக்கம்

Updated : மே 14, 2022 | Added : மே 13, 2022
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம், கட்டுப்படுத்த வேண்டிய நகர சுகாதாரத்துறையினர் வேடிக்கை பார்ப்பதால், பொது இடத்தில் புகைக்க கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.புகை நமக்கு பகை, உடலுக்கும், உள்ளத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என விழிப்புணர்வு வாசகங்கள்
 பொதுஇடங்களில் யாருக்கும் பொறுப்பில்லை... காற்றில் கலக்குது 'புகை'சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளும் தயக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம், கட்டுப்படுத்த வேண்டிய நகர சுகாதாரத்துறையினர் வேடிக்கை பார்ப்பதால், பொது இடத்தில் புகைக்க கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.



புகை நமக்கு பகை, உடலுக்கும், உள்ளத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தாலும், அவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. 'மைன்ட் ரிலாக்ஸ்', ஆபீஸ் டென்சன் குறைய, 'டீ'யோடு, ஒரு 'தம்' (சிகரெட்) அடித்தால் தான் திருப்தியாக இருக்கும், என, பல காரணங்களை கூறி சிகரெட், பீடி பிடிப்பது தொடர்கிறது.புகை பிடிப்பதே உடல் நலனுக்கு தீங்கானது, அதுவும், பொது இடங்களில் புகைப்பதால், புகைப்பவர் மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிப்பவர்களும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு பொது இடங்களில் புகை பிடித்தல் கூடாது, என, அறிவித்து, புகைத்தால் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது, சில வழக்குகள் பெயரளவுக்கு பதியப்பட்டன. அதன்பின், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த அக்கறை காட்டவில்லை.இதனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள், இளைஞர்களிடம் இருக்கும் புகை பிடிக்கும் பழக்கம், சமீப காலமாக, பள்ளி, கல்லுாரி மாணவ சமுதாயத்தையும் ஆட்கொண்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடைகளில், 'இங்கு புகைக்க கூடாது' என்ற அறிவிப்பு வாசகங்கள் வைப்பதில்லை. கடைகளில் சிகரெட், பீடியை வாங்குபவர்கள், அங்கேயே நின்று புகைப்பதால், அருகில் உள்ளவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

அவர்கள், புகையை வெளியிடும் போது, அவற்றை சுவாசிக்கும் வயதானவர்கள், பெண்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகுவதை காண முடிகிறது. அவர்களை தடுப்பதற்கு யாரும் இல்லை. அருகில் நின்று புகைக்க வேண்டாம் என்று கூறும் போது, வாக்குவாதம் ஏற்படுகிறது.இதுபோன்ற பிரச்னைகளை களைய, கொண்டு வரப்பட்ட சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பொது இடங்களில் புகைப்பவர்களுக்கும் மன அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகரப்பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தல் சட்டம் அமலில் உள்ளது. இது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொடர்ந்து கண்காணிப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, பொது இடங்களில் புகைப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

'புகை' மறந்து நலமுடன் வாழணும்!

வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் நல்லதம்பி கூறியதாவது:பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சுவாசிப்பவர்களுக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது.பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை, மார்பக புற்றுநோய், ஆஸ்துமா, குறைப்பிரசவம், குழந்தைகளுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் உலகில், ஆறு லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அவர்களில் குறைந்தது ஒரு லட்சம் பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு கேடான புகையை, பொது இடங்களில் புகைத்து மற்றவர்களது வாழ்க்கையிலும் விளையாட வேண்டாம். 'புகை' மறந்து நலமுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X