சென்னை :'மெட்ரோ ரயில் நிலைய சுவர்கள் மற்றும் துாண்களில் தடையை மீறி 'போஸ்டர்' ஒட்டுவோர் மீது கைது நடவடிக்கை பாயும்' என, மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது. சென்னையில், மெட்ரோ ரயில் நிலைய சுவர்கள், மேம்பால துாண்கள், நிர்வாக வளாக சுவர்களில், போஸ்டர் ஒட்டினாலோ, விளம்பரம் எழுதினாலோ, 6 மாதம் சிறை, 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து, அனுபவிக்க வேண்டியிருக்கும் என, மெட்ரோ நிர்வாகம்எச்சரிக்கை விடுத்தது.இதை கண்டுகொள்ளாமல், அரசியல் விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள் என, மெட்ரோ சுவர்களை சமூக விரோதி கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அரசியல் கட்சி போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டதால், மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்கியது.இந்த நிலையில், நிலைய சுவர்களில் போஸ்டர் ஒட்டிய இடங்களில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு, 'போஸ்டர் ஒட்டக்கூடாது' என, எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து, மெட்ரோ அதிகாரி கூறியதாவது:மெட்ரோ சுவர்களில், துாண்களில் இனி போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை எடுப்பது உறுதி என்ற நிலையில் தான், சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டு, போஸ்டர் ஒட்டக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மீறி ஒட்டினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி. கைது நடவடிக்கையை தவிர்க்க, இனி யாரும் மெட்ரோ சுவர்களில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE