சென்னை, சென்னையில் மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் கிராமங்களில், விமான நிலைய விரிவாக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 627 ஏக்கர் நிலத்தின் வகைப்பாடுகளை மாற்றுவதற்கான கருத்து கேட்பு பணியை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் ஆகிய கிராமங்களில், 852.88 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. 2007ல் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இதில் பின்வாங்கிய நிலையில், இத்திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், 2014ல் விடுவிக்கப்பட்டன.இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது 2007ல், 'விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிறுவன உபயோக பகுதி' என, சி.எம்.டி.ஏ., வகைப்படுத்தியது.இரண்டாவது முழுமை திட்டத்தில், இந்த வகைப்பாடு அப்படியே சேர்க்கப்பட்டது. விரிவாக்க திட்டம் கைவிடப்பட்ட நிலையில், நிலங்களின் வகைப்பாடு பழைய நிலைக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதில், நீதிமன்றம் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததால், சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதையடுத்து, நில வகைப்பாடு மாற்றத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ., எடுத்து வருகிறது. இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிவிப்பு:மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் கிராமங்களில், பாதுகாப்புத் துறை மற்றும் அரசு புறம்போக்கு நிலம் தவிர்த்து, 627.66 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாடுகள் மாற்றப்பட உள்ளன. இதற்கான உத்தேச அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கிராமம், சர்வே எண் வாரியாக இந்த வகைப்பாடுகள் அடங்கிய வரைபடம், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இது குறித்த தங்கள் கருத்துகள், ஆட்சேபங்களை, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE