பூந்தமல்லி சென்னையை ஒட்டி அமைந்துள்ள, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகளில் நிலவும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, 14 உள்ளாட்சிகளை இணைத்து, 348.40 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுள்ள நிலையில், நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகரை ஒட்டி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. இதில், 70,000 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக நீர்நிலைகளில் கலக்கிறது. இதன் காரணமாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல குளம், குட்டைகள் கழிவுநீர் சேகரிப்பு மையமாக காட்சியளிக்கின்றன. எம்.ஜி.ஆர்., நகர், பனையத்தம்மன் குட்டைகள் கழிவு நீர் தேக்கமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தாலே, குட்டைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி, குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது.இதனால், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும், எவ்வித தீர்வும் காணப்படாமல் இருந்தது. இதையடுத்து, பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், பாதாள சாக்கடை அமைக்க 2008ல், 66.22 கோடி ரூபாய் செலவில், திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீண்டும், 2013ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், பூந்தமல்லிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதுவும் வெற்று அறிவிப்பாகவே இருந்தது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டி அமைந்துள்ள 12 ஊராட்சிகள் என, 14 உள்ளாட்சிகளை இணைத்து, 348.40 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என, சமீபத்தில் அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், விரைந்து பணிகள் துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகளில், பல ஆண்டுகளாக நிலவி வரும் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE