உத்திரமேரூர்:சீத்தாவரத்தில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை சீரமைத்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சீத்தாவரம் கிராமம். இக்கிராமத்தில், மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலில், முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. பல ஆண்டுகளுக்கு முன் கோவிலின் முன் பகுதி மண்டபம் இடிந்து விழுந்து, தற்போது உற்சவர் சிலை உள்ள கட்டட பகுதி மட்டுமே மிஞ்சி உள்ளது.
இக்கட்டமும் அடுத்தடுத்த மழைக்காலங்களில் இடிந்து விழக்கூடும் என பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது:கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்கோவிலில், இரண்டு கால பூஜைகள் நடந்தன. தற்போது ஒரு கால பூஜை கூட இல்லாமல் போய் விட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து போனது. இடிந்து விழுந்த மண்டபத்தின் கருங்கற்கள், நாளடைவில் காணாமல் போனது. நந்தி, பலிபீடம், தட்சணாமூர்த்தி சுவாமி மற்றும் அம்மன் சிலைகள் தற்போது மீதமுள்ளன. பழமையான இந்த சிவன் கோவில், முழுதுமாக அழிவதற்குள், அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, கோவிலை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE