உடுமலை:உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்டஅங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்துமாவில் தயாரான கொழுக்கட்டை வினியோகிக்கப்பட்டு வருகிறது.உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்டு, 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர்.அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக, 6வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சத்துமாவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு சில குழந்தைகள் சத்துமாவை விரும்பி உண்பதில்லை.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:அங்கன்வாடி மையங்களில், 2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, சத்துமாவில் தயாரான சுவையான கொழுக்கட்டை, கஞ்சி வழங்கப்படுகிறது.
அதேபோல், உருண்டை வடிவில் சத்துமாவு வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, காலை, 9:30 மணி, மதியம், 2:30 மணி என இரு வேளைகளில் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் வீடு தேடி சத்துமாவு வழங்கப்படுகிறது.
மேலும், மையத்துக்கு வர முடியாத குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர், பணியாளர்களை அணுகினால், அவர்கள் வீடுகளுக்கும் சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.பணியாளர்களும் பெற்றோரிடம் கொடுத்து அனுப்புகின்றனர். இதன் வாயிலாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE