கொழும்பு:இலங்கையின் 26வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கே, 73, தன் அலுவல்களை நேற்று முதல் துவக்கினார். 'அவர் மக்கள் ஆதரவின்றி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆதரவு தர முடியாது' என, சமகி ஜன பாலவேகாயா, ஜனதா விமுக்தி பெருமுன உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், பிரதமராக பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அரசு இல்லாத சூழல் உருவானது. இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கேவை, இலங்கையின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.
புதிய பிரதமராக நேற்று முன்தினம் பதவி ஏற்ற ரனில், பிரதமர் அலுவலகம் வந்து நேற்று தன் அலுவல்களை துவக்கினார். இந்நிலையில் நேற்று அவர் கூறியதாவது: கோத்தகோகாமாவில் நடக்கும் போராட்டத்தை மக்கள் தொடரட்டும். அவர்களை கலைக்க போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேண விரும்புகிறோம்.
நெருக்கடியான நேரத்தில் இந்திய அரசு செய்த உதவிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும். பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.எனக்கு விதிக்கப்பட்டுள்ள பணியை முழு மூச்சுடன் செய்து முடிப்பேன் என உறுதி அளிக்கிறேன்.பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நியமிக்கப்பட்டுள்ள நான், மக்கள் எதிர்ப்பையும் சந்திக்க தயாராக உள்ளேன்.
போராட்டக்காரர்கள் விரும்பினால் அவர்களுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.மொத்தம் 225 உறுப்பினர்களை உடைய இலங்கை பார்லி.,யின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயாவுக்கு 54 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் மட்டும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜனதா விமுக்தி பெருமுனகட்சிக்கு மூன்று, எம்.பி.,க்களும், தமிழ் தேசிய கூட்டணிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சியினரும் புதிய பிரதமர் நியமனத்தை எதிர்த்து வருகின்றனர்.ஜனதா விமுக்தி பெருமுன தலைவர் அனுரா குமார திசநாயகே கூறியதாவது:
இலங்கை பிரதமராக பலமுறை பதவி வகித்துள்ள ரனில் விக்ரமசிங்கேவை, கடந்த பொது தேர்தலில் மக்கள் நிராகரித்தனர். அவரது கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை. பிரதமர் ரனில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும்இணைந்து நாட்டை ஆள்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது.இவ்வாறு அவர் கூறினார்.
'விசா' வினியோகம் நிறுத்தமா?
இலங்கையை சேர்ந்த குடிமக்கள் இந்தியா வருவதற்கான 'விசா' நடைமுறைகளை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கை:துாதரகத்தின் விசா பிரிவில் இலங்கையை சேர்ந்தவர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அலுவலகம் வருவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடிக்கிறது. எனவே, விசா வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் சீராகும். மற்றபடி, விசா வினியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று பணியை துவங்கிய முதல் நாளான நேற்று, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே அவரை சந்தித்தார்.
ட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் எம்.பி.,யாக இருந்த அமரகீர்த்தி அதுகோரலா, 57, உயிரிழந்தார்.அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். போராட்டக்காரர்கள் சூழ்ந்ததை அடுத்து, எம்.பி., அமரகீர்த்தி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE